போலீசாருக்கு மனஅழுத்த மேலாண்மை, போக்சோ சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி
![போலீசாருக்கு மனஅழுத்த மேலாண்மை, போக்சோ சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி](https://tn96news.com/wp-content/uploads/2023/03/sptrainingworkshop.jpg)
தூத்துக்குடி மாவட்ட போலீசாருக்கு மன அழுத்த மேலாண்மை பயிற்சி மற்றும் போக்சோ சட்டங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் உத்தரவுப்படி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் நடைபெற்றது.
முதற்கட்டமாக தூத்துக்குடி, தூத்துக்குடி ஊரகம் மற்றும் விளாத்திக்குளம் ஆகிய உட்கோட்டங்களைச் சேர்ந்த போலீசாருக்கு இன்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தொடக்கி வைத்தார், அப்போது அவர் பேசியதாவது:-
பொதுமக்களிடம் காவல்துறையினர் அன்பாகவும், கனிவாகவும் எவ்வித பாரபட்சமும் இல்லாமல் நடுநிலையோடு நடந்து கொள்ளவேண்டும். நம்மால் முடிந்த அளவுக்கு பொதுமக்களுக்கு நல்லது செய்ய வேண்டும். அதே நேரத்தில் குற்ற செயலில் ஈடுபடுபவர்கள் மீது எவ்வித தயக்கமுமின்றி சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள் அனைவருக்கும் பாதுகாப்பு கொடுப்பது நமது கடமை. தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்., அது காவல்துறையைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் செய்யும் தவறுக்கு சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கபட்டு அதிகபட்ச தண்டனை வழங்கப்படுகிறது. குற்ற செயலில் ஈடுபடும் இளஞ்சிறார்களை சட்டவிதிகளுக்குட்பட்டு கையகப்படுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், மொத்தத்தில் தூத்துக்குடி மாவட்டத்தை குற்றமில்லா மாவட்டமாக உருவாக்க வேண்டும்
இவ்வாறு அவர் பேசினார்.
இதனை தொடர்ந்து போலீசாரின் மன அழுத்தத்தை குறைப்பதற்கான பயிற்சி குறித்தும், பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாத்தல் குறித்தும், போக்சோ சட்டங்கள் குறித்தும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறித்தும் ஈரோடு மாவட்டம் சுகிரா அறக்கட்டளை மனநல மருத்துவர் அசோக், தூத்துக்குடி மாவட்ட ஒருங்கிணைந்த சேவை மையத்தின் நிர்வாகி செலின் ஜார்ஜ் ஆகியோர் விரிவான விளக்கமாக எடுத்துரைத்து ஆலோசனைகள் வழங்கினர்.
இந்நிகழச்சியில் தூத்துக்குடி காவல் துணை கண்காணிப்பாளர் சத்தியராஜ் மற்றும் தூத்துக்குடி, தூத்துக்குடி ஊரகம் மற்றும் விளாத்திகுளம் ஆகிய உட்கோட்டங்களைச் சேர்ந்த உதவி ஆய்வாளர்கள் உட்பட போலீசார் பலர் கலந்து கொண்டனர்.
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)