தூத்துக்குடி பஸ் நிலைய கடைகளில் கலெக்டர் ஆய்வு; வாழை இலையில் எண்ணெய் பதார்த்தங்களை வழங்க விழிப்புணர்வு
![தூத்துக்குடி பஸ் நிலைய கடைகளில் கலெக்டர் ஆய்வு; வாழை இலையில் எண்ணெய் பதார்த்தங்களை வழங்க விழிப்புணர்வு](https://tn96news.com/wp-content/uploads/2022/07/feb6e2b5-19c0-4416-8d4a-9df3e73ebe89-850x449.jpg)
தூத்துக்குடி புதிய பஸ் நிலையத்தில் தேநீர் கடைகள் மற்றும் உணவகங்களில் அச்சிட்ட காகிதங்களில் எண்ணெய் பதார்த்தங்கள் பயன்படுத்துவதை தவிர்த்து வாழை இலைகளை பயன்படுத்தும்படி மாவட்ட கலெக்டர் கி.செந்தில்ராஜ், இன்று (29.7.2022) விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
பின்னர் கலெக்டர் செந்தில்ராஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை உணவு வணிக நிறுவனங்களை தொடர்ந்து ஆய்வு செய்து பொதுமக்களுக்கு பாதுகாப்பான உணவை வழங்குவதை உறுதி செய்ய தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதுடன், பாதுகாப்பற்ற மற்றும் தரம் குறைந்த உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் வணிகர்களுக்கு அபராதம் விதிப்பது வணிகர்களுக்கெதிராக வழக்கு தொடர்வது போன்ற நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.
இருப்பினும் வடைக் கடைகள், தேநீர் கடைகள், உணவகங்கள், பேக்கரிகள், இனிப்பகங்கள் உள்ளிட்ட கடைகளில் வடை, பஜ்ஜி, போண்டா, முட்டைகோஸ், பப்ஸ், சுவீட்ஸ் மற்றும் இதர கார வகைகளை பொதுமக்களுக்கு அச்சிட்ட செய்தித்தாள் மற்றும் காகிதங்களில் பரிமாறுவதும், பார்சல் கட்டுவதும், தொடர்ந்து நடைபெற்ற வண்ணம் உள்ளது.
வணிகர்களின் இம்மாதிரியான பாதுகாப்பற்ற வணிகப் பழக்கவழக்கங்கள் பொதுமக்களின் பொது சுகாதார நலத்திற்கு ஊறுவிளைவிப்பதாகும். அதாவது அச்சிட்ட செய்தித்தாளில் விநியோகிக்கப்படும் உணவுப் பொருட்களைத் தொடர்ந்து உண்ணும் பொதுமக்களுக்கு அப்பேப்பரின் அச்சு மையில் உள்ள காரீயத்தினால், வயிற்றுப்புண் ஏற்பட்டு பின்னாளில் அது கேன்சராக உருவெடுக்கவும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
எனவே பொதுமக்களின் பொது சுகாதார நலனை கருத்தில் கொண்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தாலும், வணிகர்களுக்கும், நுகர்வோர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்துவது மிகவும் அவசியமாகும். செய்தித்தாள் மற்றும் காகிதங்களுக்கு மாற்றாக வாழை இலை, பனையோலை ஆகியவற்றை பயன்படுத்த வேண்டும். மேலும் ஆகாய தாமரையில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை பயன்படுத்த வேண்டும். பாலிதீன் தயாரிக்கப்படும் நிறுவனங்களில் அரசு விதிமுறைகள் படி நடவடிக்கை எடுக்கப்படும்.
ஒவ்வொரு உணவகங்களில் உள்ளவர்கள் டைபாய்டு ஊசி போட்டவர்கள்; குறித்து கணக்கெடுக்கப்பட்டு வருகிறது. மேலும் செய்தித்தாள் மற்றும் காகிதங்களில் உணவுகளை பொட்டலம் செய்பவர்களை குறித்து மாநில உணவு பாதுகாப்பு அதிகாரி 9444042344, தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி 8680800944 ஆகிய எண்களில் புகார் தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதனைத்தொடர்ந்து இன்று புதிய பஸ் நிலையத்தில் செயல்பட்டு வரும் தேநீர் கடைகள் மற்றும் உணவகங்களில் ஆய்வு மேற்கொண்டு உணவு பதார்த்தங்களை செய்தி தாள்களில் வைத்து கொடுக்கக்கூடாது என்று அறிவுரைகள் கூறியிருக்கிறோம். நிறைய கடைகளில் வாழை இலைகள் பயன்படுத்தி பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது. இன்றைக்கு ஒரு நாள் அனைத்து வியாபாரிகளுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த நாங்களே வாழை இலை கொடுக்கிறோம்.
திண்பண்டங்களில் ஈ, கொசுக்கள் மொய்க்காமல் இருக்க வாழை இலை கொண்டு மூடி வைக்க வேண்டும் என மக்களுக்கும், வியாபாரிகளுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்திட மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இவ்வாறு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்தார்.
கலெக்டருடன் மாவட்ட நியமன அலுவலர் மாரியப்பன், தூத்துக்குடி வருவாய் கோட்டாட்சியர் சிவசுப்பிரமணியன், தூத்துக்குடி வட்டாட்சியர் செல்வக்குமார், சென்று இருந்தனர்,
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)