2 நாட்களுக்கு பிறகு குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி; கூட்டம் திடீர் அதிகரிப்பு
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் தற்போது சீசன் நிலவுகிறது, நேற்று முன்தினம் கேரள பகுதியில் பெய்த கனமழை காரணமாக குற்றாலம் அருவிகளில் வெள்ளபெருக்கு ஏற்பட்டது,
மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் நிறைய பேர் ஆனந்தமாக குளித்து கொண்டிருந்த போது வெள்ளபெருக்கு அதிகரித்தது. இதனால் அங்கிருந்தவர்களை போலீசார் அப்புறப்படுத்தினார்கள்.
இதற்கிடையே வெள்ளத்தில் 5 பேர் சிக்கிகொண்டனர். இதில் 3 பேர் காப்பாற்றப்பட்டனர். 2 பெண்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு இறந்து போனார்கள்.
இதை தொடர்ந்து அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. நேற்று ஆடி அமாவசை என்பதால் அன்றையை தினம் அருவிகளில் யாரையும் குளிக்க அனுமதிக்கப்படவில்லை.
இரண்டு நாட்களுக்கு பிறகு இன்று வெள்ளிக்கிழமை அருவிகளில் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது, சுற்றுலா பயணிகள் வருகை குறைவாக இருந்தது. மெயின் அருவியில் நிதானமாக நின்று குளித்தனர்.
தொடர்ந்து ஒவ்வொரு அருவிக்கும் சென்று ஆனந்த குளியல் போட்டனர். வெயில் கொளுத்தியது. இதற்கு அருவி குளியல் இதமாக இருந்ததாக சுற்றுலா பயணிகள் தெரிவித்தனர். ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளிலும் தண்ணீர் கணிசமாக விழுந்தது. அருவிகளில் காலை நேரத்தில் கூட்டம் குறைவாக இருந்தது. மதியத்துக்கு பிறகு மெயின் அருவியில் திடீரென கூட்டம் அதிகரிக்க தொடங்கியது. இதே போல் பழைய குற்றாலம் அருவி மற்றும் ஐந்தருவி ஆகியவற்றில் கூட்டம் அதிகம் இருந்தது.