சர்வதேச செஸ் ஒலிம்பியாட் ஜோதி கோவில்பட்டி வந்தது;உற்சாக வரவேற்பு
இந்தியாவில் முதன்முறையாக தமிழகத்தில் மாமல்லபுரத்தில் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் ஜூலை 28-ம் தேதி முதல் ஆக.10-ம் தேதி வரை நடைபெற உள்ளது. ‘
செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெறுவது குறித்து தமிழகம் முழுவதும் உள்ள மக்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் பல்வேறு போட்டிகள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதையொட்டி செஸ் ஒலிம்பியாட் தீப ஒளி ஜோதி தமிழகம் முழுவதும் வலம் வருகிறது
இந்த தீப ஒளி ஜோதி நேற்று தூத்துக்குடி மாவட்டம் வந்தது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்ற தீப ஒளி ஜோதி மாலையில் கோவில்பட்டி வந்தடைந்தது. தேசிய உயரம் தாண்டுதல் போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற தூத்துக்குடி கல்லூரி மாணவி சஹானா தீம் ஒளி ஜோதியை எடுத்து வந்து சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பெ. கீதாஜீவனிடம் வழங்கினார்.
இதையொட்டி கோவில்பட்டி கிருஷ்ணா நகர் செயற்கை புல்வெளி ஆக்கி மைதானத்தில் நடந்த வரவேற்பு நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் கி. செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். கோட்டாட்சியர் க.மகாலட்சுமி வரவேற்றார். முதன்மை கல்வி அலுவலர் க.பாலதண்டாயுதபாணி வாழ்த்துரை வழங்கினார்.
விழாவில், அமைச்சர் பெ.கீதாஜீவன் பேசுகையில், “44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் தமிழகத்தில் நடைபெற முதல் காரணகர்த்தா முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான். மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் வெற்றிகரமாக நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன” என்றார்.
தொடர்ந்து பள்ளி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள், சிலம்பாட்டம், மாதிரி சதுரங்க ஆட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. நிகழ்ச்சியில் நகர்மன்ற தலைவர் க.கருணாநிதி, ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் கஸ்தூரி சுப்புராஜ், நகர்மன்ற ஆணையாளர் ஒ.ராஜாராம், இந்திய ஆக்கி அணி வீரர் மாரீஸ்வரன், ஒன்றிய திமுக செயலாளர் வீ.முருகேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
வரவேற்பு நிகழ்ச்சி முடிந்ததும் செஸ் ஒலிம்பியாட் தீப ஒளி ஜோதி சென்னைக்கு புறப்பட்டது.