• April 18, 2024

கோவில்பட்டி புதுரோடு தார்ச்சாலையில் கால்வாய் போல் ஓடும் சாக்கடை; நகரசபை நிர்வாகத்தின் பாராமுகம்

 கோவில்பட்டி புதுரோடு தார்ச்சாலையில் கால்வாய் போல் ஓடும் சாக்கடை; நகரசபை நிர்வாகத்தின் பாராமுகம்

கோவில்பட்டி நகரின் மிக முக்கிய பிரதான சாலையாக விளங்குவது புதுரோடு. சாத்தூர் பகுதியில் இருந்து இருந்து ரெயில் நிலையம் வழியாக தூத்துக்குடி செல்லும் கனரக வாகனங்கள் மற்றும் சரக்கு லாரிகள் செல்லும் முக்கிய சாலை. அரசு மருத்துவமனை க்கு செல்லும் ஆம்புலன்சுகள் இந்த சாலையில் அடிக்கடி பயணிக்கின்றன.
இது தவிர வங்கிகள், ஏ.டி.எம்.மையங்கள் இந்த சாலையில் அதிகம் உள்ளன. உணவு விடுதிகள், டீக்கடைகள், ஸ்பேர் பார்ட்ஸ் கடைகள், லாரி செட்டுகள், பழைய இரு சக்கர வாகங்கங்கள் விற்பனையகம், மருந்து கடைகள், ஜவுளிக்கடைகள், பேக்கரிகள் என பல தொழில் நிறுவனங்கள் உள்ளன. மேலும் வீடுகளும் அதிகம் இருக்கின்றன,
இவ்வளவு முக்கியமான சாலையானது பொதுமக்களுக்கு சவுகரியம் இல்லாத சாலையாகத்தான் இருந்து கொண்டு இருக்கிறது.

மூடப்படாத வடிகால். அதை கடக்க போடப்பட்டிருக்கும் தற்காலிக மரப்பலகை மற்றும் மரக்கம்புகள்.


புதுரோடு இறக்கத்தில் குண்டும் குழியுமான சாலையில் மழை பெய்தால் தண்ணீர் தேங்கி வாகன ஓட்டிகளை சிரமத்துக்கு உள்ளாக்குவது வாடிக்கை. பல்லாங்குழி போல் இருந்த இந்த சாலைக்கு ஒரு மாதத்துக்கு முன்பு ஒட்டு போட்டு தற்காலிக தீர்வு கண்ட நகராட்சி நிர்வாகம், அடுத்து சில நாட்களில் சாலையின் ஒரு பகுதியில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணியில் இறங்கியது. முயல் வேகத்தில் தொடங்கிய இந்த பணி அடுத்து ஆமை வேகத்தில் செல்லதொடங்கியது,
ஒரு வழியாக புதுரோட்டில் ஆழ்வார் தெருவில் இருந்து இறக்கம் முடிவு வரை வடிகால் அமைத்து விட்டார்கள். அதற்கு மேல் தளம் போட்டு மூடாமல் அப்படியே திறந்த நிலையில் காட்சி அளிக்கிறது. வடிகாலுக்கு முன்பாக குடிநீர் குழாய்க்காக தோண்டப்பட்ட பள்ளம் நீண்ட நாட்களுக்கு பிறகு இப்போது மூடப்பட்டு இருக்கிறது. ஆனாலும் வடிகால் மேல் தளம் போடாததால் அதை தாண்டி போவதற்கு மரப்பலகைகள் , நீளமான கம்புகள் வைத்து கயிற்றால் கட்டி தற்காலிக பாதை அமைத்து இருக்கிறார்கள். இதில் நடந்து மட்டுமே செல்லமுடியும். வயதானவர்களுக்கு அது ஒரு சவாலாகத்தான் இருக்கிறது.
ஒரு மாதத்துக்கும் மேலாகியும் இந்த பணி நிறைவு பெறாத நிலையில் எதிர்புறத்தில் சாக்கடை வடிகாலை ஆழப்படுத்தும் பணி தொடங்கப்பட்டது. இதனால் 2 வாரமாக சாலையின் ஒரு பகுதியில் சாக்கடை தண்ணீர் கால்வாய் போல் சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது. சில சமயங்களில் குறைவாகவும், பல சமயங்களில் சாலை முழுவதும் பெருகி எதிர்புற சாலைக்கும் தாவும் வகையில் சாக்கடை ஆறு போல் ஓடுகிறது.

சாலையில் ஓடும் சாக்கடை


இதனால் இரு சக்கர வாகங்களில் செல்வோர் உடையில் சாக்கடை தண்ணீர் பட்டு சுகாதார கேடு உண்டாகிறது. பாதசாரிகள் சாக்கடையில் நடந்து செல்வது தவிர்க்க முடியாததாகி விடுகிறது.
சாக்கடை காரணமாக இந்த சாலையில் உள்ள கடைகளை வாடிக்கையாளர்கள் தவிர்க்கும் நிலை உருவாகி உள்ளது, இதனால் வியாபாரிகள் கவலையில் உள்ளனர். கோவில்பட்டியை தலைமையிடமாக கொண்டு மாவட்டம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வரும் நிலையில் கோவில்பட்டி அவல நிலையில் காட்சி அளிப்பது வேதனை அளிப்பதாக பொதுமக்கள் கூறுகிறார்கள்.
நகராட்சி நிர்வாகத்தின் பாராமுகத்தை கண்டித்து ஆளும் கட்சியை ஆதரிக்கும் கட்சிகள் மட்டுமின்றி எதிர்க்கட்சிகளும் போராட்டம் எதுவும் நடத்தி தங்கள் எதிர்ப்பை காட்டாதது ஏன் என்பதுதான் தெரியவில்லை. இந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் என்ன நடவடிக்கை எடுத்துள்ளார் என்பதும் கேள்விக்குறியாக இருக்கிறது.

எனவே இந்த பிரச்சினையில் உரிய நடவடிக்கை வேகமாக எடுக்கப்பட வேண்டும் என்பது பொதுமக்களின் பொதுவான கோரிக்கை.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *