• May 1, 2024

இன்று மூன்றாம் பிறை தரிசனம்…சந்திர தரிசனம் செய்ய மறவாதீர் !

 இன்று  மூன்றாம் பிறை தரிசனம்…சந்திர தரிசனம் செய்ய மறவாதீர் !

இன்று ஜூன் 3௦ வியாழக்கிழமை சந்திர தரிசனம்!
இன்று மூன்றாம் பிறை, சந்திர தரிசனம் செய்வதால் மன நிம்மதி, ஆரோக்கியம், ஆயுள் விருத்தி உண்டாகும். அமாவாசை முடிந்து மூன்றாம் பிறை தரிசனம் பார்த்து விட்டால் அந்த ஆண்டு இரண்டு மடங்கு வருமானம் செல்வ செழிப்பு உண்டாகும் என்பது நம்பிக்கை.
மூன்றாம் பிறை பார்க்க முடியாவிட்டால் வீட்டில் சிவ வழிபாடு செய்வதும், சிவன் தலையில் இருக்கும் சந்திரனை இன்று மாலை தரிசனம் செய்வது சிறப்பு.

வானில் தோன்றும் மூன்றாம் பிறை நிலவைத் தரிசிப்பதையே, ‘பிறை காணுதல்’ என்கின்றனர்.
பஞ்சாங்கத்திலும், காலண்டரிலும் மூன்றாம் பிறையை மக்கள் பார்க்க வேண்டும் என்பதற்காக ‘சந்திர தரிசனம்’ என்று குறிப்பிட்டுள்ளது.

சிவன், பார்வதி, விநாயகப் பெருமான் போன்ற தெய்வங்கள் சூடும் இந்தப் பிறை தெய்வீக சின்னமாகும். காமம், வெகுளி, மயக்கம் இந்த மூன்று குணங்களையும் கடந்தவன் முக்தி அடையலாம் என்பதை நினைவுபடுத்துவதற்கே பெரியவர்கள் இதைக் காண வேண்டும் என்று கூறினார்கள்.

மூன்றாம் பிறை உருவான கதை:

ஒரு முறை தட்சனின் சாபத்தால், தனது பதினாறு கலைகளையும் இழந்தான் சந்திரன். தனது கலைகளை மீண்டும் பெறுவதற்காக சந்திரன் சிவனை நினைத்து தியானம் செய்தார். தட்சனின் சாபத்தால் உருகும் சந்திர பகவானின் தேக நிலை குறித்து மிகவும் வருத்தம் அடைந்தனர்.
அவரின் இருபத்தேழு நட்சத்திர மனைவியர்.

உடனே தங்களின் தந்தையான தட்சனிடம் சென்று சாப விமோசனம் அளிக்கும்படி வேண்டினர் . தட்சனோ தனது அறியாமையால் அளித்த சாபத்தால் தனது புண்ணியம் அனைத்தும் குறைந்துவிட்டது என்றும், தன்னால் சாப விமோசனம் அளிக்க முடியாது என்றும் கூறினார்.

இறுதியில் 27 நட்சத்திர மனைவியரும் சந்திரனும் சிவ பெருமானை நினைத்து தவம்புரிந்தனர். சந்திரனின் தவத்தை மெச்சிய சிவபெருமான் தன் தலைமுடியில், ‘மூன்றாம் பிறையாக’ அமரும் பேறுபெற்றார்.

சுறுசுறுப்போடு அதேநேரம் சிறுகச்சிறுக வளர்ந்தால் முழுப்பலனையும் அடைய முடியும் என்னும் கருத்தை வலியுறுத்துகின்றது இந்த பிறை. இதை வைத்துத்தான் எண்பது வயது நிறைவுற்றவர்களை ‘ஆயிரம் பிறை கண்டவர்’ என்று அவருக்கு சதாபிஷேகம் செய்து கொண்டாடுகின்றோம்.

பலன்கள் :

அமாவசையை அடுத்து வரும் மூன்றாம் நாளில் சந்திர தரிசனம் காண்பவர்களுக்கு ஞாபக சக்தி அதிகரிக்கும். மனக்குழப்பம் நீங்கும். கண் பார்வை தெளிவாகும். செவ்வாய், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் வரும் மூன்றாம் பிறை மிகவும் விசேஷமான ஒன்றாகும்.

குறிப்பாக சித்திரை, வைகாசி மாதங்களில் வரும் இப்பிறையைக் கண்டால் ஓர் ஆண்டு சந்திர தரிசனம் செய்த பலன் கிடைக்கும். கார்த்திகை, மார்கழி மாதங்களில் வரும் மூன்றாம் பிறையைக் கண்டால் சகல பாவங்களும் தொலையும்.

நான்காம் பிறையை ஏன் பார்க்கக் கூடாது ?

ஒரு முறை விநாயகப் பெருமான் சந்திரலோகத்துக்கு விஜயம் செய்தார். கையில் கொழுக்கட்டையுடன் வந்திருந்த விநாயகரை கண்டு ஏளனம் செய்த சந்திரன் மீது விநாயகர் மிகுந்த கோபம் அடைந்தார். அன்று பிள்ளையார் சதுர்த்தி வேறு. கோபமுற்ற கணபதி, ‘சதுர்த்தியில் உன்னைப் பார்ப்பவர்கள் வீண்பழிக்கு ஆளாவார்கள்!’ என்று சபித்தார். மனம் வருந்திய சந்திரனோ, தான் அறியாது செய்த தவற்றை மன்னித்து சாப விமோசனம் தரும்படி கேட்டுக்கொண்டான். விநாயகர் சந்திரனை மன்னித்தார், ஆனால், மூன்றாம்பிறையைப் பார்ப்பவர்களுக்கு மட்டும் முழு மகிழ்ச்சி பொங்கும் என்று அருளினார்.

நான்காம்பிறையைப் பார்த்ததால் வரும் கெடுபலனை எப்படித் தவிர்க்கலாம்? இதற்கும் புராண காலத்தில் கிடைத்த ஒரு தீர்வைப் பார்ப்போம்.

ஒருமுறை சதுர்த்தியில் வரும் நான்காம் பிறையைப் பார்த்து வீண்பழிக்கு ஆளானார் கண்ணன். இதற்குப் பரிகாரமாக, அடுத்த திங்களில் (அடுத்த மாதத்தில்) அமாவாசையை அடுத்து வரும் மூன்றாம் நாளில் சந்திர தரிசனம் செய்ததோடு கணபதியையும் வேண்டி பழியில் இருந்து விடுபட்டார்.

காலை வேளை பிரம்ம முகூர்த்தமாகும். மாலை வேளை விஷ்ணு முகூர்த்தமாகும்.
எனவே, அந்த வேளையில் சந்திர தரிசனம் செய்து, வீட்டில் விளக்கேற்றி வழிபட்டால் செல்வம் பெருகும்.

திருமணம் ஆனவர்கள் தம்பதி சமேதராக சந்திர தரிசனம் செய்யலாம். திருமணம் ஆகாதவர்கள் பெற்றோருடன் சேர்ந்து மூன்றாம் பிறையை தரிசிக்கலாம். இதனால் குடும்ப ஒற்றுமை பெருகும்.
தொகுப்பு:காசி விஸ்வநாதன், திருநெல்வேலி

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *