• May 13, 2024

அப்பனேரி வெங்கடேஸ்வரா கார்டனில் தொடர் மின்தடை ; பொதுமக்கள் கடும் அவதி

 அப்பனேரி வெங்கடேஸ்வரா கார்டனில் தொடர் மின்தடை ; பொதுமக்கள் கடும் அவதி

 கோவில்பட்டி அடுத்த அப்பனேரி பஞ்சாயத்து வெங்கடேஸ்வரா கார்டன்வேகமாக முன்னேறி வரும் பகுதி.தற்போது சுமார் 200 வீடுகள் உள்ளன.தொடர்ந்து பல வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன.

 வீடுகள் பெருகும் அளவுக்கு இங்கு அடிப்படை வசதிகள்இல்லை என்றே சொல்ல முடியும்.மெயின் ரோட்டில் மட்டும் தார் சாலை உள்ளது. தெருக்கள் முழுவதும் கல் சாலைகள் மற்றும் மண் சாலைகளாகத்தான் உள்ளன.

 இந்தப் பகுதியில் வடிகால் வசதி கிடையாது. பஞ்சாயத்து சார்பில் குடிநீர் சப்ளையையும் கிடையாது. குப்பைகள் அகற்றும் வசதியும் இல்லை. இதனால் காலி மனைகளில் குப்பைகள் தேங்கி கிடக்கின்றன. தெரு விளக்குகள் முழுமையான அளவில் எரிவது கிடையாது.

 சாதாரண பஞ்சாயத்தில் கூட அதிக வெளிச்சம் தரக்கூடிய சோடியம் விளக்குகள் பொருத்தப்பட்டு வரும் நிலையில் இந்த பஞ்சாயத்தில் அது போன்ற எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை.

 இந்த சூழ்நிலையில் வெங்கடேஸ்வரா கார்டன் பகுதியில் சீரான மின் விநியோகம் கிடையாது. குறைந்த மற்றும் அதிக மின்னழுத்தம் காரணமாக பல வீடுகளில் மின்னணு சாதனங்கள் பழுதடைந்து நஷ்டத்தை ஏற்படுத்தி உள்ளன.

மேலும் ஒரு வாரமாக இப்பகுதியில் தொடர் மின் தடை ஏற்பட்டு வருகிறது. காலை முதல் மாலை வரை மின் விநியோகம் ரத்து செய்யப்படுவதால். வீடுகளில் மோட்டார் போடுவது, சமையலுக்கு  மிக்ஸி பயன்படுத்துவது போன்றவற்றை செய்ய முடியாமல் பெண்கள் கடும் அவதிப்படுகிறார்கள். கை குழந்தைகள் வைத்துள்ள பெண்கள் மேலும் துன்பப்படுகிறார்கள்.

 தற்போது வெயில் கொளுத்தி வருவதால் மின்விசிறி ஓட முடியாமல் வியர்வையில் குளிக்கிறார்கள். இன்வெர்ட்டர் வசதி வைத்திருப்பவர்கள் கூட ஒரு சில மணி நேரம் தான் மின்விசிறிகளை சுழலவிட முடியும். அதன் பிறகு வியர்வை குளியல் தான்.

 பொதுவாக மின் தடை செய்யப்படுவதற்கு முன்பு  முன் அறிவிப்பு செய்யப்பட வேண்டும். அதுபோல் எதுவும் செய்யாமல் திடீர் திடீர் என மின் தடை செய்யப்படுகிறது.

 மின்வாரிய அலுவலகத்துக்கு போன் செய்து கேட்டால் மின் சப்ளை சரியாக இருக்கிறது என்கிறார்கள். குறிப்பிட்ட பகுதியில் மின்சாரம் இல்லை என்றால் வயர் மேனிடம் கேட்கசொல்கிறார்கள்.

 அவர்களை தொடர்பு கொண்டால் அலட்சியமாக பதில் அளிக்கிறார்கள் என்று பொதுமக்கள் புகார் கூறுகிறார்கள்.

 இது தொடர்பாக அந்த பகுதி சேர்ந்த ஒரு பெண் கூறுகையில், ” மின் தடையால் ஏற்படும் அல்லல் குறித்து மின்வாரிய ஊழியரை தொடர்பு கொண்டால், வேலை நடக்கிறது. பிறகு கரண்ட் வரும் என்று அலட்சியமாக பதில்சொல்கிறார்கள்.”என்றார்.

 வர்த்தக பிரமுகர் ஒருவர் கூறுகையில்” நான் இது பற்றி கேட்டபோது டிரான்ஸ்பார்மர் அமைக்கும் பணி நடக்கிறது. சப்ளை லேட்டாக கிடைக்கும் என்று பதில் கூறினார்கள். டிரான்ஸ்பார்மர் அமைப்பது நல்லது தான். 8 மணி நேரம் மின்தடையை இரண்டாக பிரித்து சிறிது நேரம் இடைவெளி விட்டு மீண்டும் மின் தடை செய்யலாம். இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள். மின்சாரம் இல்லை பொழுதுபோக்கு நிகழ்ச்சிக்காக டிவி பார்க்க முடியவில்லை. காலையில் போன மின்சாரம் மாலை 5.30 மணிக்கு தான் வந்திருக்கிறது. எனவே முன் அறிவிப்பு செய்து மின்தடை செய்ய முயற்சி செய்ய வேண்டும்” என்றார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *