அரசியல் ரீதியாக சிவாஜி கணேசனை ஒப்பீடு செய்வதா? முத்தரசனுக்கு காங்கிரஸ் கலைப்பிரிவு தலைவர் கண்டனம்
![அரசியல் ரீதியாக சிவாஜி கணேசனை ஒப்பீடு செய்வதா? முத்தரசனுக்கு காங்கிரஸ் கலைப்பிரிவு தலைவர் கண்டனம்](https://tn96news.com/wp-content/uploads/2022/06/92d76ef6-c575-4a0a-8901-6e43b78b644b-850x560.jpg)
கே.சந்திரசேகரன்
தமிழக காங்கிரஸ் கலைப்பிரிவு தலைவர் கே. சந்திரசேகரன் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் முத்தரசன் , நரேந்திர மோடியின் செயல்பாடுகளைப் பற்றி விமர்சிக்கும்போது, நடிகர்திலகம் சிவாஜி கணேசன் உயிரோடு இருந்திருந்தால், தன்னுடைய நடிப்புத் திறமைக்காகப் பெற்ற செவாலியே உள்ளிட்ட விருதுகளை, பிரதமர் மோடிக்கு கொடுக்கச் சொல்லியிருப்பார் என்று கிண்டலாக கூறியிருக்கிறார். இப்படி ஒப்பிட்டுப் பேசியிருப்பதற்கு என்னுடைய கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.
திரையுலகில் மட்டுமல்ல, பொதுவாழ்விலும் யாருடனும் ஒப்பிட முடியாதவர் சிவாஜி கணேசன். அதற்கான காரணங்கள் சில….
*திரையுலகில் தன்னுடைய தன்னிகரில்லா நடிப்புத் திறனால் ஒப்புயர்வற்று விளங்கிய சிவாஜி, பொது மேடையில், பொதுவெளியில் சிறிதும் நடிக்க தெரியாத, கள்ளம் கபடமற்ற தூய மனிதராகத் திகழ்ந்தவர்.
![](https://tn96news.com/wp-content/uploads/2022/06/download.jpg)
*ஏற்றிவிட்ட ஏணியை எட்டி உதைக்கும் இந்தக் காலத்தில், திரையுலகில் தன்னை ஏற்றிவிட்ட பெருமாள் முதலியாரானாலும் சரி, அரசியல் வாழ்வில் தான் ஏற்றுக்கொண்ட பெருந்தலைவர் காமராஜர் ஆனாலும் சரி, தன் வாழ்நாள் இறுதி வரை நன்றியுணர்வோடு, அவர்கள் மேல் பக்தியோடு இருந்தவர்.
•அரசியல் மாச்சரியங்களை கடந்து அனைத்து கட்சி தலைவர்களிடமும் நட்பு பாராட்டியவர்.
•திரையில், இந்து கடவுளர்களாக தோன்றியதோடு, இஸ்லாமிய, கிறித்துவ நண்பனாகவும் தோன்றி நடித்தது மட்டுமல்ல, தன் ரசிகர்களிடமும், பொதுவாழ்விலும், ஜாதி, மத வேறுபாடின்றி, வெறுப்பு அரசியலுக்கு இடமின்றி, அனைத்து மக்களிடமும் அன்பு செலுத்தியவர்.
•காங்கிரஸ் கட்சியில் ராஜ்யசபை உறுப்பினராக இரண்டரை ஆண்டு காலம் பதவி வகித்தபோது, எம்.பி.க்களுக்கான போக்குவரத்து மற்ற சலுகைகளை கூட பெற்றுக்கொள்ள மறுத்தவர்.
•அரசியல் கட்சி தொடங்கினாலும் மக்களிடம் வசூலிக்காமல், தன் சொந்த பணத்தையே செலவிட்டவர்.
•வஞ்சகம், சூது நிரம்பிய அரசியலில், ”உள்ளதைச் சொல்வேன் – சொன்னதைச் செய்வேன், வேறொன்றும் தெரியாது” என்ற பாடல் வரிகளுக்கேற்ப, நாகரிக அரசியலை முன்னெடுக்கவேண்டும் என்று விரும்பியவர் நடிகர்திலகம் சிவாஜி.
•இனியாகிலும், திரையுலகிலும்., அரசியலிலும், தன் மனசாட்சிப்படி. நேர்மையாக நடந்துகொண்ட சிவாஜி அவர்களைப் பற்றி தவறான பிம்பத்தை ஏற்படுத்திடும் வகையில், அவருடைய நேர்மை அரசியலை. தூய்மை அரசியலை விவாதப் பொருளாக்கி, வேறு யாருடனும் ஒப்பிட்டு, அவர் பெயரை களங்கப்படுத்தவேண்டாம் என்று கேlட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு கே,சந்திரசேகரன் கூறி உள்ளார்.
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)