கூவாகத்தில் அழகிப்போட்டி: `மிஸ் திருநங்கை’யாக தூத்துக்குடி சக்தி தேர்வு

கள்ளக்குறிச்சி மாவட்டம் கூவாகம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற கூத்தாண்டவர் கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 29-ந் தேதி சாகை வார்த்தல் நிகழ்ச்சியுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இவ்விழாவில் ஆயிரக்கணக்கான திருநங்கைகள் விழுப்புரம் மற்றும் பல்வேறு ஊர்களில் இருந்து கூவாகம் கிராமத்திற்கு வந்துள்ளனர். இவர்களை மகிழ்விக்கும் வகையிலும், உற்சாகப்படுத்தும் விதமாகவும் திருநங்கைகளுக்கான பல்வேறு நடனப்போட்டிகள், கலை நிகழ்ச்சிகள், அழகிப்போட்டிகள் நடந்து வருகிறது.
அந்தவகையில் நேற்று மாலை தேசிய திருநங்கைகள் கூட்டமைப்பு சார்பில் கூவாகம் திருவிழா நிகழ்ச்சி விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள நகராட்சி திடலில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு முன்னிஜி தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் பொன்முடி எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். சினிமா நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க பொதுச்செயலாளருமான விஷால் கலந்து கொண்டு பேசினார்.
இதைத்தொடர்ந்து மிஸ் திருநங்கை-2025 அழகிப்போட்டிக்கான முதல் சுற்று நடந்தது. இதில் விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, சென்னை, புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் கலந்துகொண்டனர்.

அவர்கள் விதவிதமான, வண்ண, வண்ண உடைகளில் மேடையில் தோன்றி ஒய்யாரமாக நடந்து வந்தனர். இவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் மற்ற திருநங்கைகள் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர்.
இறுதிச்சுற்றில் தூத்துக்குடியை சேர்ந்த சக்தி என்பவர் “மிஸ் திருநங்கை”யாக தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து சென்னையை சேர்ந்த ஜோதா 2-ம் இடத்தையும், விபாஷா 3-ம் இடத்தையும் பிடித்தனர். இவர்களுக்கு கிரீடம் சூட்டப்பட்டு முதல் பரிசாக ரூ.20 ஆயிரம், 2-ம் பரிசாக ரூ.15 ஆயிரம், 3-ம் பரிசாக ரூ.10 ஆயிரம் வழங்கப்பட்டது.

