கோவில்பட்டி பள்ளிக்கூடங்களின் 282 வாகனங்கள் ஆய்வு


கோவில்பட்டி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு உட்பட்ட பகுதியில் 80 பள்ளிகளைச் சேர்ந்த 306 வாகனங்கள் இயங்கி வருகின்றன. அவற்றில் 282 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டது.
பள்ளி வாகனங்கள் ஆய்வு கோட்டாட்சியர் மகாலட்சுமி, வட்டாரப் போக்குவரத்து அலுவலர் கிரிஜா ஆகியோர் தலைமையில் நடந்தது. காவல் உதவி ஆய்வாளர் செந்தில்குமார், மோட்டார் வாகன ஆய்வாளர் சுரேஷ் விஸ்வநாத், மற்றும் பள்ளிக் கல்வித் துறையினர் ஆகியோர் அடங்கிய குழுவினர் ஆய்வு செய்தனர்.
ஆய்வின்போது 21 வாகனங்களில் பல்வேறு குறைகள் கண்டுபிடிக்கப்பட்டன, அந்த குறைகளை சரிசெய்து மீண்டும் ஆய்வுக்கு உட்படுத்தவேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.

பள்ளி வாகன ஓட்டுநர்களுக்கும், உதவியாளர்களுக்கும் தீ விபத்து மற்றும் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. தீயணைப்பு நிலைய அலுவலர் ராஜேந்திரன் தலைமையிலான குழுவினர் செயல்முறை விளக்கம் அளித்தனர். 108 ஆம்புலன்ஸ் பிரிவு குழுவினர் முதலுதவி செய்வது தொடர்பாக செயல்முறை விளக்கம் அளித்தனர்.
ஆய்வுக்கு உட்படுத்தப்படாத வாகனங்கள் மற்றும் குறைகள் கண்டுபிடிக்கப்பட்ட வாகனங்களை மீண்டும் ஆய்வுக்கு உட்படுத்தி சான்றிதழ் பெற்ற பின்னரே இயக்க வேண்டும். அவ்வாறு சான்றிதழ் பெறாமல் இயக்கப்படும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அனுமதிச்சீட்டின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டாரப் போக்குவரத்து அலுவலர் கிரிஜா எச்சரிக்கை விடுத்துள்ளார்.


