ஒப்பந்த ஊழியர்கள் போராட்டம்: தூத்துக்குடி என்.டி.பி.எல். அனல் மின் நிலையத்தில் 1000 மெகாவாட் மின்உற்பத்தி பாதிப்பு

தூத்துக்குடி என்.டி.பி.எல். அனல் மின் நிலையத்தில் பணிபுரிந்து வரும் ஒப்பந்த ஊழியர்கள் என்.எல்.சி.யில் வழங்குவது போன்று ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 22 நாட்களாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் காரணமாக என்.டி.பி.எல். அனல்மின் நிலையத்தில் 2 அலகுகள் மூலம் தலா 500 வீதம் உற்பத்தி செய்யப்படும் 1000 மெகாவாட் மின்சார உற்பத்தி முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. முதல்கட்டமாக கடந்த 3-ந்தேதி முதல் யூனிட் நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் நேற்று நள்ளிரவு 2-வது யூனிட்டும் முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. தற்போது கோடை காலம் என்பதால் மின்சார தேவை அதிகமாக இருக்கும் நிலையில் தமிழகம் முழுவதும் வெகுவாக பாதிப்பை ஏற்படுத்தும்.
இதற்கிடையே தமிழக அரசுக்கு சொந்தமான தூத்துக்குடி அனல் மின் நிலையத்திலும் ஏற்கனவே சமீபத்தில் ஏற்பட்ட தீ விபத்தின் காரணமாக 2 அலகுகளில் 420 மெகாவாட் மின்சார உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
