• May 14, 2025

அமைச்சர் துரைமுருகனிடம் இருந்து கனிமவளத்துறை பறிப்பு ஏன்?

 அமைச்சர் துரைமுருகனிடம் இருந்து கனிமவளத்துறை பறிப்பு ஏன்?

அமைச்சர் துரைமுருகனிடம் இருந்த கனிமவளத்துறை, அவரிடம் இருந்து பறிக்கப்பட்டு அமைச்சர் ரகுபதிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இலாகா மாற்றம் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அமைச்சர் துரைமுருகன் வகித்து வந்த கனிமவளத்துறை ரகுபதிக்கு மாற்றப்பட்டதற்கான காரணம் என்ன என்பது பற்றி கோட்டை வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அடுத்த படியாக, 2-வது இடத்தில் அமைச்சர் துரைமுருகன் இருந்து வருகிறார். தி.மு.க.வின் பொதுச் செயலாளராகவும், அவை முன்னவராகவும் இருந்து வருகிறார்.

தமிழகத்தில் கனிம வள கொள்ளை பிரச்சினை என்பது, பல ஆண்டு காலமாக இருந்து வருகிறது. கன்னியாகுமரி, தென்காசி, கோவை வழியாக கேரள மாநிலத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான லாரிகளில் கனிம வளங்கள் கொள்கையடிக்கப்பட்டு செல்வதாக குற்றச்சாட்டு நிலவுகிறது.

இந்தப் பிரச்சினை சட்டசபையிலும் அவ்வப்போது எதிரொலிக்கும். கடந்த மாதம் நடந்த சட்டசபை கூட்டத் தொடரில் கூட, அ.தி.மு.க.வை சேர்ந்த எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் இந்த பிரச்சினையை எழுப்பினார்.

அவர் பேசியபோது, “தென்காசி, கன்னியாகுமரி, கோவை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லாரிகள் கனிம வளங்களுடன் அண்டை மாநிலத்திற்கு சென்ற வண்ணம் இருக்கிறது. மக்களும் தொடர்ந்து போராடிக் கொண்டு தான் இருக்கிறார்கள். கனிம வளங்களை பாதுகாக்க அரசு முன்வர வேண்டும்” என்றார்.

அதற்கு பதில் அளித்த அமைச்சர் துரைமுருகன்,”ஏதோ நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகுதான் லாரிகள் சென்று கொண்டிருப்பது போல உறுப்பினர் பேசுகிறார். நீங்கள் (அ.தி.மு.க.) ஆட்சியில் இருக்கும்போதும் இப்படி தான் நடந்தது” என்று பதிலளித்தார்.

அதாவது, குற்றச்சாட்டை அமைச்சர் துரைமுருகன் மறுக்கவில்லை. மாறாக அ.தி.மு.க. ஆட்சியிலும் இதுதான் நடந்தது என்பதையே சுட்டிக்காட்டினார்.

இதற்கிடையே, தமிழகத்தில் எம்.சாண்ட், ஆற்று மணல் விலை அதிகமாக இருப்பதாக புகார்கள் எழுந்தது. ஆங்காங்கே போராட்டங்களும் நடைபெற்றன. இதனால், சுதாரித்துக் கொண்ட தமிழக அரசு உடனடியாக ஆலோசனை நடத்தி, எம்.சாண்ட், மணல் விலையை ரூ.1000 அளவுக்கு குறைப்பதாக அறிவித்தது. என்றாலும், இந்தப் பிரச்சினை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

இந்த நிலையில், கனிமவள பிரச்சினையில் அமலாக்கத் துறையும் தற்போது தலையிடுவதால், அது அரசுக்கு கூடுதல் பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் நேரத்தில் இதுபோன்ற நடவடிக்கைகள் அரசுக்கு கெட்டப்பெயரை ஏற்படுத்திவிடும் என்று தி.மு.க. அரசு கருதியது. அதனைத் தொடர்ந்தே, அமைச்சர் துரைமுருகனிடம் முக்கிய துறையாக இருந்த கனிமவளத் துறை திரும்பப் பெறப்பட்டு, அதற்கு பதிலாக சட்டத் துறை வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது..

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *