தூத்துக்குடி இயக்குநர் இயக்கிய “திரு” குறும்பட கலைஞர்களுக்கு ஆல்பர்ட் ஜான் பாராட்டு

கொல்கத்தாவில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற 5ம் ஆண்டு சர்வதேச திரைப்பட விழாவில் தமிழ்நாட்டில் தூத்துக்குடியை சேர்ந்த இயக்குநர் அருந்ததி அரசு என்பவரின் “திரு” என்ற குறும்படம் தமிழ் மொழியில் முதலிடம் பிடித்து சாதனை படைத்தது.
இந்த குறும்படம் திருநங்கையர்களின் வாழ்வியல் பிரச்சினைகளையும், அடுத்த கட்ட நகர்வு குறித்தும் அழுத்தமாக பேசும் விதமாக எடுக்கப்பட்டிருந்தது.

தூத்துக்குடி மாவட்டத்தில் காவல்துறை சார்பாக உருவாக்கப்பட்டு வெளியிடப்பட்ட “திரு” என்கிற திருநங்கைகள் குறித்த விழிப்புணர்வு குறும்படத்தின் இயக்குநர் மற்றும் அனைத்து கலைஞர்களுக்கும் மாவட்ட காவல் அலுவலகத்தில் எஸ்.பி. தலைமையில் நேற்று (6.5.2025) பாராட்டு விழா நடைபெற்றது.
இதில் “திரு” குறும்படம் திரையிடப்பட்டு பின்னர், அதன் இயக்குநர் அருந்ததி அரசு மற்றும் குறும்படத்தின் அனைத்து கலைஞர்களுக்கும் மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் பாராட்டு சான்றிதழ் வழங்கி வாழ்த்தினார்.

இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி ஏ.டி.எஸ்.பி.க்கள் ஆறுமுகம், தீபு உட்பட காவல் துறையினர் மற்றும் குறும்படத்தின் அனைத்து கலைஞர்களும் கலந்து கொண்டனர்.

