20 வது நாள் வேலைநிறுத்தம்: தூத்துக்குடி என்டிபிஎல் ஒப்பந்த தொழிலாளா்கள் சட்டை அணியாமல் போராட்டம்

என்எல்சி தமிழ்நாடு பவா் லிமிடெட் நிறுவனம் சாா்பில் தூத்துக்குடியில் செயல்படும் என்டிபிஎல் அனல் மின் நிலையத்தில், தலா 500 மெகா வாட் உற்பத்தி திறன் கொண்ட 2 அலகுகள் இயங்கி வருகின்றன. இந்த அனல்மின் நிலையத்தில் சுமாா் 1350 க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனா்.
இங்கு பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளா்கள் தங்களுக்கு நெய்வேலி என்எல்சியில் வழங்குவது போன்று ஊதியம் வழங்க வேண்டுமென வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டனா்.

மேலும் இது தொடா்பாக சென்னை உயா்நீதிமன்றத்தில் தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பு சாா்பில் தொடுக்கப்பட்ட வழக்கிலும் இவா்களுக்கு சாதகமாக தீா்ப்பு வந்துள்ளது. ஆனால் என்டிபிஎல் நிா்வாகம் இதுகுறித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தது.
இதைத் தொடா்ந்து கடந்த 18ஆம் தேதி முதல் என்டிபிஎல் ஒப்பந்த தொழிலாளா்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். இவா்களுடன் என்டிபிஎல் நிா்வாகம், என்எல்சி நிா்வாகம், தொழிலாளா் துறை ஆணையா் தலைமையில் நடைபெற்ற சுமாா் 6 கட்ட பேச்சுவாா்த்தை தோல்வியில் முடிவடைந்துள்ளது.

ஒப்பந்த தொழிலாளா்களின் தொடா் போராட்டம் காரணமாக 2ஆவது அலகு முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. முதல் அலகில் சுமாா் 250 மெகாவாட் மின் உற்பத்தி மட்டுமே நடைபெறுவதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் இன்று 20வது நாளாக போராட்டம் தொடர்கிறது. மேலும், தொழிலாளர்கள் மேல் சட்டை அணியாமல் பட்டை நாமம் போட்டு கோஷமிட்டனர். மத்திய, மாநில அரசுகள் தலையிட்டு, உரிய நடவடிக்கை மேற்கொண்டு வேலைநிறுத்தப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரவேண்டும் என வலியுறுத்தினர்.

