• May 14, 2025

சாலையில் தோண்டப்பட்ட குழிக்குள் விழுந்த வாகனம்; தம்பதி பலி

 சாலையில் தோண்டப்பட்ட குழிக்குள் விழுந்த வாகனம்; தம்பதி பலி

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த சேர்வகாரன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் நாகராஜ். இவர் திருப்பூர் பச்சாபாளையம் டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக வேலை செய்து வந்தார். இவரது மனைவி ஆனந்தி. இந்த தம்பதியின் மகள் தீக்ஷனா தாராபுரத்தில் உள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில் நாகராஜ் தனது மனைவி மற்றும் மகளுடன் திருச்செந்தூர், திருநள்ளாறு உள்ளிட்ட ஆன்மிக தளங்களுக்கு சென்றுள்ளார். அவர்கள் மூவரும் இன்று அதிகாலை 3 மணியளவில் தாராபுரம் பேருந்து நிலையத்திற்கு வந்திறங்கியுள்ளனர். அங்கிருந்து நாகராஜ் தனது இருசக்கர வாகனத்தில் மனைவி மற்றும் மகளுடன் வீட்டிற்கு புறப்பட்டுச் சென்றார்.

அவர்கள் தாராபுரம் குள்ளாய்பாளையம் அருகே வந்தபோது, சாலையின் மத்தியில் பாலம் கட்டுவதற்காக தோண்டப்பட்டிருந்த ஆழமான குழிக்குள் நாகராஜின் இருசக்கர வாகனம் தவறி விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில் சம்பவ இடத்திலேயே நாகராஜ் மற்றும் அவரது மனைவி ஆனந்தி ஆகிய இருவரும் உயிரிழந்தனர். ]

அவர்களது மகள் தீக்ஷனா பலத்த காயமடைந்து உயிருக்கு போராடிய நிலையில் உதவி கேட்டு விடிய விடிய சத்தமிட்டுள்ளார். ஆனால் மூவரும் ஆழமான குழிக்குள் விழுந்து கிடந்ததால் சாலையில் சென்ற வாகன ஓட்டிகளுக்கு விபத்து குறித்து தெரியவில்லை.

இந்நிலையில் அதிகாலை அந்த வழியாக கல்லூரிக்கு சென்று கொண்டிருந்த மாணவர்கள் சிலர் சிறுமியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உயிரிழந்த நாகராஜ்-ஆனந்தி தம்பதியின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

சிறுமிக்கு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *