சைபர் மோசடி வழக்குகளில் மீட்கப்பட்ட ரூ.3.71 லட்சம்; உரியவர்களிடம் ஆல்பர்ட் ஜான் ஒப்படைத்தார்

தூத்துக்குடி மாவட்டத்தில் ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம், இருசக்கர வாகனம் விற்பனை என்பன போன்ற போலி விளம்பரங்கள் இணையத்தில் உலா வருகின்றன.
இதை நம்பி தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பெண் உட்பட 3 பேர் பணம் அனுப்பி ஏமாற்றப்பட்டு உள்ளனர். பாதிக்கப்பட்ட 3 பேர் இதுகுறித்து தேசிய சைபர் குற்றப்பிரிவு போலீஸ் பிரிவில் புகார் பதிவு செய்தனர்.

இதன் அடிப்படையில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் உத்தரவின்படி சைபர் குற்றப்பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் சகாய ஜோஸ் மேற்பார்வையில் சைபர் குற்றப்பிரிவு ஆய்வாளர் சாந்தி தலைமையிலான போலீசார் தொழில்நுட்பரீதியாக விசாரணை மேற்கொண்டு, மோசடிக்கு பயன்படுத்தப்பட்ட வங்கி கணக்குகளை கண்டறிந்து அவற்றை முடக்கம் செய்தனர்.

மேலும் புலன் விசாரணை நடத்தி ஆன்லைன் முதலீடு மோசடி வழக்குகளில் ரூ.38,993, ரூ.2,98,510 மற்றும் இருசக்கர வாகன விற்பனை மோசடி வழக்கில் ரூ.34,000 என மொத்தம் ரூ.3,71,503 பணத்தை திரும்ப பெற்றனர்,
மீட்கப்பட்ட ரூ.3,71,503 பணத்தை, பாதிக்கப்பட்டவர்களை வரவழைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் ஒப்படைத்தார்.

