கோவில்பட்டி அருகே புளியங்குளம் நடுநிலைப் பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள்; துரை வைகோ திறந்து வைத்தார்


கோவில்பட்டி அருகே புளியங்குளம் கிராமத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியான ஏ.பி.ஏ.சி. நடுநிலைப்பள்ளியில் தனியார் தொழிற்சாலையின் தொழிலக சமுக பங்களிப்புத் திட்டம் மற்றும் கிராம மக்கள் சார்பில் புதிய வகுப்பறை கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன.
இதன் திறப்பு விழா நடந்தது. செமிக்ரோமேடிக் தொழிற்சாலை அதிகாரி யோகசுந்தரம் தலைமை தாங்கினார். ஸ்ரீவாரி அலாய்ஸ் நிர்வாக இயக்குநர் அசோகன் முன்னிலை வகித்தார். மதிமுக துணைப் பொதுச் செயலாளர் தி.மு.ராஜேந்திரன் வரவேற்றார். பள்ளிக்கட்டிடத்தை மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ எம்.பி. திறந்து வைத்து பேசியதாவது: புளியங்குளம் ஏ.பி.ஏ.சி. நடுநிலைப்பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்ட வேண்டுமென ஊர் மக்கள் என்னிடம் கோரிக்கை விடுத்தனர்.

அரசு மட்டுமல்ல தனியாரும் மக்களுக்கு உதவிகளை செய்ய முடியும். அதற்கு எடுத்துக்காட்டு தான் அசெமிக்ரோமேடிக் தொழிற்சாலை. இந்த ஆலையின் சமுக பங்களிப்பு திட்டத்தில் ரூ.15 லட்சம், கிராம மக்கள் சார்பில் ரூ.6 லட்சம் என மொத்தம் ரூ.21 லட்சம் மதிப்பில் புதிய வகுப்பறை கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன.
பள்ளி மாணவ மாணவிகளுக்கு படிப்பு தான் முக்கியம். உங்களுக்கு என்ன பிடிக்கிறதோ அதனை படித்தால் எவ்வளவு பெரிய உச்சத்தையும் தொடலாம். நல்ல உழைப்பு, தனி மனித ஒழுக்கம் இருந்தால் எதையும் அடையலாம். இந்த தொழிற்சாலை உரிமையாளர் தினமும் 15 கி.மீ. பள்ளிக்கு நடந்து சென்றுள்ளார். அவர் தனது உழைப்பாலும், மதிநுட்பத்தாலும் ஆண்டுக்கு ரூ.3500 கோடி ஆண்டு வருவாய் வரக்கூடிய தொழிற்சாலை நிறுவி உள்ளார். இவர்களை போன்றவர்கள் தான் வாழும் உதாரணம்.

சாதி, மதங்கள் வேண்டாம். இவை நமக்கு சோறு போடாது. சாதி, மத பெருமை பேசுபவர்கள் சிக்கலில் தான் முடிப்பார்கள். அவரவருக்கு பிடித்த கடவுளை கும்பிடலாம். ஆனால், யாரையும் சங்கடப்படுத்த வேண்டாம். இதன் மூலம் மோதலை ஏற்படுத்தி, தேர்தல் நேரத்தில் அறுவடை செய்வது அரசியல்வாதிகளும், அரசியல் இயக்கங்களும் தான். இதற்கு என்றும் பலியாகி விடக்கூடாது.
இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில், கோவில்பட்டி நகர்மன்ற துணை தலைவரும், மதிமுக மாவட்ட செயலாளருமான ஆர். எஸ்.ரமேஷ், மாநில ஒழுங்கு நடவடிக்கைக் குழு உறுப்பினர் விநாயகா ரமேஷ், தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் சுதா பாலசுப்பிரமணியன், குருவிகுளம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் விஜயலட்சுமி கனகராஜ், தென்காசி மாவட்ட ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் தேவி ராஜகோபால்,
மாவட்டத் துணைச் செயலாளர் தேய்வேந்திரன்,ஒன்றிய செயலாளர் ராஜகோபால்,கேசவ நாராயணன்,சரவணன்,மாநில தீர்மானக் குழு உறுப்பினர் முத்துச்செல்வம் மற்றும் மாணவ மாணவிகள், ஆசிரியர்கள், கிராம மக்கள் கலந்து கொண்டனர்.
