தீவிரவாதிகளை அகற்ற அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றுபட்டு குரல் கொடுக்க வேண்டும்; வைகோ பேச்சு

மதிமுக முன்னாள் எம்.பி. ரவிசந்திரன் மகள் ஸ்ரீரேகா –திவாகர் திருமணம் கோவில்பட்டி ராம் அனுமான் நகரில் உள்ள திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எம்.பி. கலந்து கொண்டு திருமணத்தினை நடத்தி வைத்தார்.
மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ எம்.பி.மற்றும் மதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர் திருமண விழாவில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசுகையில் கூறியதாவது:-
திமுகவில் 30 ஆண்டுகள், மதிமுகவில் 31 ஆண்டுகள் என 61 ஆண்டுகள் அரசியல் மற்றும் பொதுவாழ்வில் இருக்கிறேன். அப்படி நீ என்ன சாதனை செய்தாய் என்று கேட்டால் உலக கோடீஸ்வரர்களில் ஒருவரான ஸ்டெர்லைட் ஆலையின் உரிமையாளர் அனில் அகர்வால் வீசிய வலையில் சிக்கியவர்கள் பலர், நான் பெயர்களை சொல்ல விரும்பவில்லை. அவர் என்னை சந்திக்க வேண்டும் என்று தலைகீழாக நின்றார். ஆனால் அவரை ஒரு நிமிடம் கூட பார்க்க மாட்டேன் என்று மறுத்து விட்டேன்,

விவசாயிகள், மீனவர்கள் தூத்துக்குடி மாவட்ட மக்களுக்காக உண்ணாவிரதம், மறியல் என தொடர் போராட்டத்தில் ஈடுபட்டது மட்டுமின்றி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தேன். ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தீர்ப்பு வந்தது.
அந்த ஆலையை வைத்து வருமானம் தேடிய லாரி அதிபர்கள் நாமக்கல் அருகே ஸ்டெர்லைட் ஆலை வேண்டும் என்று ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளார்கள். ஸ்டெர்லைட் ஆலையினால் நாமக்கல்காரர்களுக்கு ஒரு பாதிப்பும் கிடையாது, உங்கள் சகோதரர்களாகிய தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள், மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுவிடும் என்பதால் எவ்வளவோ போராட்டங்கள் நடத்தி வெளியே அனுப்பியுள்ளோம், ஸ்டெர்லைட் ஆலையை தமிழகத்தில் இருந்து வெளியே அனுப்பிய பங்கு மதிமுகவிற்கு தான் உண்டு,

இப்போது நாடு பதற்றமான நிலையில் உள்ளது. தேனிலவிற்கு சென்ற 4 தம்பதிகள் காஷ்மீர் பஹல்காமில் தீவிரவாதிகளினால் கொலை செய்யப்பட்டுள்ளனர். நம்முடைய பிரதமர், கற்பனைக்கு எட்டாத காரியங்களில் ஈடுபட்டு தீவிரவாதிகளை ஒழிப்பேன் என்று பேசி இருக்கிறார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த பிரச்சினையில் ஒன்றிய அரசுக்கு தமிழ்நாடு அரசு பக்கபலமாக உறுதுணையாக இருக்கும் என்று கூறியுள்ளார். இந்தியாவில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் சேர்ந்து ஒரே குரலாக தீவிரவாதிகளை அகற்ற வேண்டும் என்று இருக்க வேண்டும்,
விவசாயிகள் நொறுங்கி போய் இருக்கிறார்கள், அவர்கள் முதுகெலும்பும் நொறுங்கி போய் உள்ளது.100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தினால் அழிந்து போன விவசாய குடும்பங்கள் ஏராளம். நெருக்கடியான நிலையில் இருப்பவர்கள் விவசாயிகள், தயவு செய்து விவசாய நிலங்களை விற்பனை செய்ய வேண்டாம், உலகத்தில் உணவு பஞ்சம் வரவுள்ளது. அப்போது விவசாயியை தான் எல்லோரும் தேடுவார்கள்.
இவ்வாறு வைகோ பேசினார்.

