சாத்தூர் அருகே சரக்கு ஆட்டோ-கல்லூரி பஸ் மோதல்

கோவில்பட்டியை அடுத்த சாத்தூர் பகுதியில் இருந்து இன்று மதியம் 1.30 மணி அளவில் பட்டாசு ஆலையில் இருந்து புஸ்வானம் ஏற்றிக்கொண்டு சிவகாசி நோக்கி ஒரு சரக்கு ஆட்டோ சென்றது.
மேட்டமலை என்ற பகுதியில் உள்ள தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வாசல் பகுதியில் வாகனங்களின் வேகத்தை குறைக்க தடுப்பு பலகைகள் வைக்கப்பட்டு உள்ளன.
அந்த பகுதியில் சரக்கு ஆட்டோவும். சிவகாசியில் இருந்து சாத்தூர் நோக்கி வந்த இன்னொரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரி பஸ்சும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் சரக்கு ஆட்டோ நிலை குலைந்து கவிழ்ந்தது.

இதில் சரக்கு ஆட்டோ டிரைவர் மற்றும் ஒருவர் என இருவர் காயம் அடைந்தனர். கல்லூரி பஸ்சின் முன் பகுதியில் லேசான சேதம் ஏற்பட்டது. மாணவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை.
விபத்து பற்றி அறிந்ததும் போலீசார் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். விபத்தை தடுக்க வைக்கப்பட்ட தடுப்பு பலகைகளே விபத்துக்கு காரணமாகி விட்டதான அந்த பகுதியை கடந்த வாகன ஓட்டிகள் தெரிவித்தனர்.
