சுடுகாட்டில் 11 கிலோ கஞ்சா பதுக்கல்; கல்லூரி மாணவர் உட்பட 3 பேர் கைது

கோவில்பட்டி புது கிராமம் சுடுகாடு பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக தனி பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் கோவில்பட்டி கிழக்கு போலீஸ் உதவி ஆய்வாளர் செந்தில் வேல்முருகன் தலைமையில் காவலர் கழுகாசலமூர்த்தி மற்றும் தனிப்பிரிவு காவலர்கள் செசிலின் வினோத், முத்துராமலிங்கம், அருணாச்சலம் மற்றும் போலீசார் அங்கு சென்றனர்.
போலீசார் சென்றதும் சுடுகாடு பகுதியில் நின்றிருந்தவர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். ஒரு சிலரை போலீசார் சுற்றி வளைத்து 3 பேரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் சுடுகாட்டுப் பகுதியில் விற்பனைக்காக கஞ்சாவை பதுக்கி வைத்து இருந்தது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து கஞ்சா பதுக்கி வைத்திருந்ததாக கோவில்பட்டி காமராஜர் நகர் பகுதியைச் சேர்ந்த ராஜசேகர பாண்டி (32), கோபாலபுரம் கிராமத்தைச் சேர்ந்த கருப்பசாமி (33) மற்றும் 17 வயது கல்லூரி மாணவர் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து 11 கிலோ கஞ்சா மற்றும் 2 இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர். இவர்களுக்கு கஞ்சா எங்கிருந்து வந்தது? தப்பி ஓடியவர்கள் யார்? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


