தூத்துக்குடி உள்ளிட்ட கிழக்கு கடற்கரை பகுதிகளில் மீன்பிடி தடைகாலம் 15-ந்தேதி அமல்

மீன்பிடி தடைக்காலம் என்பது கடலில் மீன்களின் இனப்பெருக்கத்துக்காக சில நாட்கள் அல்லது சில மாதங்கள் ஆழ்கடலில் மீன்பிடிக்க அரசு விதித்துள்ள தடைக்காலத்தை குறிப்பதாகும்.
கோடை காலங்களில் மீன்களின் இனப்பெருக்கம் அதிகம் நடைபெறும். இக்காலங்களில் மீன்கள் கடலுக்கு அடியில் உள்ள பாறைகளில் முட்டையிட்டு குஞ்சுகள் பொரிக்கும்.
விசைப்படகுகள் ஆழ்கடலில் மீன்பிடிக்கச் செல்லும் போது படகுகள் மற்றும் வலைகளில் அடிப்பட்டு மீன் குஞ்சுகள் அழியும் நிலை ஏற்படும். எனவே இக்காலங்களில் கடலில் மீன்பிடிக்க அரசு தடை விதித்துள்ளது.
அதன்படி தூத்துக்குடி உட்பட தமிழகத்தின் கிழக்கு கடற்கரை பகுதிகளில் 61 நாள் மீன்பிடித் தடைக்காலம் வருகிற 15-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது. ஜூன் மாதம் 14-ம் தேதி வரை 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் அமலில் இருக்கும்,


இதன்படி வருகிற 14ம் தேதி நள்ளிரவு 12 மணி முதல் தூத்துக்குடி மாவட்டத்தில் மீன்பிடி தடைகாலம் அமலுக்கு வரும். இதனால் தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்தில் 258, தருவைகுளத்தில் 245, வேம்பாரில் 36 என மொத்தம் சுமார் 539 விசைப்படகுகள் மீன்பிடிக்க கடலுக்குள் செல்லாது.
நாட்டுப்படகுகளில் செல்லும் மீனவர்கள் கொண்டு வரும் மீன்கள் விற்பனைக்கு வரும். மேலும் கேரளா கடல் பகுதிகளில் பிடிக்கப்படும் மீன்கள் தூத்துக்குடி மாவட்ட விற்பனைக்கு வியாபாரிகள் வாங்கி வருவார்கள். இதனால் மீன்கள் மீன் விலை உயரும்.
