• May 19, 2025

ஆபரேஷன் சிந்தூர் பற்றி முன்கூட்டியே பாகிஸ்தானுக்கு தெரிந்ததால்  எத்தனை விமானங்களை நாம் இழந்தோம்?  ராகுல்காந்தி கேள்வி

 ஆபரேஷன் சிந்தூர் பற்றி முன்கூட்டியே பாகிஸ்தானுக்கு தெரிந்ததால்  எத்தனை விமானங்களை நாம் இழந்தோம்?  ராகுல்காந்தி கேள்வி

பஹல்காமில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் அரங்கேற்றிய தாக்குதலுக்கு பதிலடியாக, அந்த நாட்டில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா அதிரடி தாக்குதல் நடத்தியது.

ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரிலான இந்தியாவின் ராணுவ நடவடிக்கை பாகிஸ்தானை கலங்கடித்தது. எனவே ஆத்திரம் அடைந்த அந்த நாடு இந்திய எல்லைகளை தாக்கியது. இதற்கும் இந்திய படைகள் தீவிர பதிலடி கொடுத்தன.

இரு நாடுகளுக்கு இடையே 4 நாட்கள் நீடித்த இந்த ராணுவ மோதலால் உச்சக்கட்ட போர்ப்பதற்றம் உருவானது. இதைத்தொடர்ந்து இரு நாடுகளின் ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குனர் ஜெனரல்கள் ஹாட்லைன் மூலம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதன் மூலம் கடந்த 10-ந் தேதி மாலையில் இருந்து இருதரப்புக்கு இடையே சண்டை நிறுத்தம் ஏற்பட்டது.

இந்தநிலையில், ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கர் செய்தியாளர் சந்திப்பில் கூறுகையில், ராணுவ நிலைகளை குறிவைக்கவில்லை, பயங்கரவாத முகாம்கள் மீது மட்டுமே தாக்குதல் நடத்தவுள்ளோம் என இந்தியா பாகிஸ்தானிடம் தெரிவித்தது’ எனக் குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு கண்டனம் தெரிவித்து நேற்று பதிவிட்ட ராகுல் காந்தி, ‘ஆபரேஷன் சிந்தூர் குறித்து பாகிஸ்தானுக்கு முன்பே தெரிவிக்கப்பட்டதாக மத்திய மந்திரி ஜெய்சங்கர் கூறியுள்ளார். இதன் விளைவாக இந்திய விமானப் படைக்கு சொந்தமான எத்தனை போர் விமானங்கள் சேதமடைந்தன என்பதைக் கூற முடியுமா?நமது தாக்குதல் குறித்து தொடக்கத்திலேயே பாகிஸ்தானிடம் கூறியது குற்றம். இதை பொதுவெளியில் ஜெய்சங்கர் ஒப்புக்கொள்கிறார். இதற்கு அங்கீகாரம் வழங்கியது யார்?’ என ராகுல் கேள்வி எழுப்பினார்.

இதனிடையே, ஆபரேஷன் சிந்தூர் குறித்து பாகிஸ்தானுக்கு முன்பே தெரிவிக்கப்பட்டதாக  ஜெய்சங்கர் கூறியதாக வெளியிடப்படும் தகவல் தவறானது என பத்திரிகை தகவல் பணியகத்தின் தகவல் சரிபார்ப்புக் குழு எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டது.

மேலும், ஆபரேஷன் சிந்தூர் தொடக்கத்தில்தான் பாகிஸ்தானுக்கு விளக்கம் கொடுத்ததாகவும், தாக்குதலுக்கு முன்பே கொடுக்கவில்லை என்றும் வெளியுறவுத் துறை விளக்கம் அளித்தது.

இந்த நிலையில், இன்று மீண்டும் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, “ஆபரேஷன் சிந்தூர் பற்றி முன்னரே தெரிவித்தது ஏதோ ஒரு சிறு குறைபாடு அல்ல, குற்றம்.  வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கரின் மவுனம் மோசமானது. எனவே நான் மீண்டும் கேட்கிறேன், பாகிஸ்தானுக்குத் தகவல் தெரிந்ததால் எத்தனை இந்திய விமானங்களை நாம் இழந்தோம்? இது தவறு அல்ல, இது ஒரு குற்றம். இந்தியாவுக்கு உண்மை தெரிந்தாக வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *