சாத்தான்குளம் அருகே 5 பேர் உயிரை பறித்த கிணற்றில் இருந்து 45 பவுன் நகைகள் மீட்பு


தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகே வெள்ளாளன்விளையைச் சேர்ந்தவர் மோசஸ் (வயது 50). கோவை துடியலூரில் மளிகை கடை நடத்தி வரும் இவர், அப்பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
மோசஸ் தனது சொந்த ஊரான வெள்ளாளன்விளையில் உள்ள கிறிஸ்தவ ஆலய பிரதிஷ்டை விழாவில் பங்கேற்பதற்காக நேற்று முன்தினம் இரவில் குடும்பத்தினர், உறவினர்களுடன் காரில் புறப்பட்டு வந்தார்.
அவர்கள் சொந்த ஊருக்கு செல்லும் வழியில் நேற்று காலையில் குற்றாலத்துக்கு சென்று அருவிகளில் குளித்தனர்.
பின்னர் மாலையில் குற்றாலத்தில் இருந்து நெல்லை, மூலைக்கரைப்பட்டி வழியாக காரில் சொந்த ஊருக்கு சென்றனர். மோசஸ் காரை ஓட்டினார். சாத்தான்குளம் அருகே உள்ள மீரான்குளம் அருகில் சென்றபோது, மோசஸின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தடுப்பு சுவர் இல்லாத தரைமட்ட கிணற்றுக்குள் எதிர்பாராதவிதமாக கார் பாய்ந்தது.
அந்த கிணற்றில் சுமார் 60 அடி ஆழத்துக்கும் அதிகமாக தண்ணீர் இருந்ததால் கார் மூழ்க தொடங்கியது. அப்போது காரில் இருந்து வெளியே வந்த மோசஸ் மகன் கெர்சோம் (29), ரவி கோயில்பிச்சை மகள் ஜெனிபா எஸ்தர், கெர்சோம் மனைவி சைனி கிருபாகரன் (26) ஆகிய 3 பேரும் தண்ணீரில் தத்தளித்தனர்.
உடனே அக்கம்பக்கத்தினர் விரைந்து சென்று, கிணற்றில் தத்தளித்த 3 பேரையும் மீட்டனர். தொடர்ந்து கிணற்றில் காருடன் மூழ்கியவர்களை மீட்க முயன்றனர். ஆனாலும் கிணற்றுக்குள் கார் மூழ்கியதால் உள்ளே சிக்கியவர்களை மீட்க முடியவில்லை.

கிணற்றில் மூழ்கிய காரில் இருந்த மோசஸ், அவருடைய மனைவி வசந்தா (49), சந்தோஷ் மகன் ரவி கோயில்பிச்சை, அவருடைய மனைவி கெத்சியாள் கிருபா, கெர்சோம் மகன் ஸ்டாலின் (1½) ஆகிய 5 பேரும் தண்ணீருக்குள் மூழ்கினர்.
சாத்தான்குளம் போலீசார் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.சாத்தான்குளம், நாங்குநேரி தீயணைப்பு நிலைய வீரர்கள் கிணற்றில் இறங்கி, காரில் கயிறு கட்டி 2 பொக்லைன் எந்திரங்கள் மூலம் வெளியே தூக்க முயன்றனர். ஆனாலும் மீட்க முடியவில்லை.

தொடர்ந்து இரவில் அதிக ஒளிபாய்ச்சும் மின்விளக்கு ஏற்பாடு செய்யப்பட்டு, அதிக இழுவைத்திறன் கொண்ட ராட்சத கிரேனும் வரவழைக்கப்பட்டது. முத்துக்குளி வீரர்கள் மற்றும் ஆழ்கடலில் நீந்தும் ஸ்கூபா வீரர்களும் வரவழைக்கப்பட்டனர்.அவர்கள் ஆக்சிஜன் சிலிண்டருடன் கிணற்றில் இறங்கி, காரில் சிக்கி பலியானவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்., சுமார் 4 மணி நேரத்திற்கு பிறகு கிணற்றில் இருந்து குழந்தை ஸ்டாலின் உள்பட5 பேரும் பிணமாக மீட்கப்பட்டனர்.
இந்தநிலையில், கிணற்றில் கார் கவிழ்ந்த விபத்தில், 20 சவரனுக்கு மேற்பட்ட நகைகள் இருப்பதாக விபத்தில் உயிரிழந்த மோசஸ் உறவினர்கள் போலீசாரிடம் தெரிவித்தனர்.

அந்தவகையில், உயிரிழந்தவர்களின் உறவினர்கள் அளித்த தகவலின்படி, கிணற்றுக்குள் மூழ்கி கிடந்த 20 சவரனுக்கு மேற்பட்ட நகைகளை மீட்பதற்காக தூத்துக்குடி முத்து குளிக்கும் மீனவர்கள் வரவழைக்கப்பட்டு கிணற்றுக்குள் நகைகளை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது நீரில் மூழ்கி கிணற்றுக்குள் இருந்த 45 பவுன் நகைகள் மற்றும் பொருட்களை மீனவர்கள் மீட்டனர். நகைகளை மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இதனிடையே, விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து உள்ளார்; அத்துடன் தலா ரூ.3 லட்சம் நிதி உதவி அளித்து உள்ளார். இதற்கிடையே இறந்து போனவர்களின் உறவினர்களை திமுக எம்.பி., கனிமொழி சந்தித்து ஆறுதல் கூறினார்.
