கோவில்பட்டி புது ரோட்டில், வைகோ எம்.பி. பரிந்துரைப்படி ரூ.35 லட்சத்தில் எல்.இ.டி. மின் விளக்குகள் அமைக்கும் பணி தொடக்கம்

கோவில்பட்டி நகரின் மிக முக்கியமான சாலையாக புதுரோடு விளங்குகிறது. ரெயில் நிலையத்தில் இருந்து தூத்துக்குடி செல்லும் சாலையான புதுரோட்டில் நிறைய வங்கிகள், முக்கிய அலுவலகங்கள் உள்ளன.
இந்த சாலையில் அதிக வெளிச்சம் தரக்கூடிய விளக்குகள் கிடையாது. சாலையின் நடுவே தடுப்பு சுவர் அமைத்தும் சோடியம் விளக்கு நிறுவவில்லை.; இரவில் இருள் சூழ்ந்து காணப்படும் இந்த புதுரோட்டில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் முதல் முச்சந்தி விநாயகர் கோவில் வரை போதிய மின்விளக்கு வசதி இல்லாததால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ எம்.பி.யின் பரிந்துரையின் படி பாராளுமன்ற உறுப்பினர் உள்ளூர் வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.35 லட்சம் மதிப்பீட்டில் 30 எல்.இ.டி. மின் விளக்குகள் அமைப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கான பணிகள் தொடக்க விழா நகராட்சி தலைவர் கருணாநிதி தலைமையில் நடைபெற்றது. துரை வைகோ எம்.பி. அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்

நகராட்சி கமிஷனர் கமலா, ம.தி.மு.க துணை பொதுச் செயலாளர் தி.மு.ராசேந்திரன், தூத்துக்குடி மாவட்ட மதிமுக செயலாளர் ஆர்.எஸ். ரமேஷ், நெல்லை மத்திய மாவட்ட செயலாளர் கே. எம்.ஏ. நிஜாம், விருதுநகர் கிழக்கு சாத்தூர் கண்ணன், அரசு வக்கீல் சுப்பாராஜ், ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினர் விநாயகா ரமேஷ், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

