சென்னை-தூத்துக்குடி இடையே வந்தே பாரத் ரெயில்: நாடாளுமன்றத்தில் கனிமொழி எம்.பி. வலியுறுத்தல்

சென்னை- தூத்துக்குடி இடையே பயணிகள் போக்குவரத்து அதிகரித்துள்ள நிலையில் சென்னைக்கும், தூத்துக்குடிக்கும் இடையே வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட வேண்டும் என்று திமுக துணைப் பொதுச் செயலாளரும், திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவரும், தூத்துக்குடி எம்,.பி.யுமான கனிமொழி வலியுறுத்தி உள்ளார்.
நாடாளுமன்ற மக்களவையில் கேள்வி நேரத்தில் கனிமொழி பேசியதாவது;-
,சென்னைக்கும் தூத்துக்குடிக்கும் இடையே அதிகரித்து வரும் பயணிகள் போக்குவரத்தினை எதிர்கொள்ள, தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் வழியாக பழைய ஜனதா எக்ஸ்பிரஸ் வழித்தடத்தில் புதிய எக்ஸ்பிரஸ் ரெயிலை அறிமுகப்படுத்துவதன் மூலம், தற்போதுள்ள முத்துநகர் எக்ஸ்பிரசில் கூட்ட நெரிசலைக் குறைப்பதற்கு ஒன்றிய அரசு திட்டம் வைத்துள்ளதா? அப்படியானால், அதன் விவரங்கள், இல்லையென்றால், அதற்கான காரணங்கள் என்ன?

தூத்துக்குடியிலிருந்து குருவாயூர் எக்ஸ்பிரஸ் மற்றும் நாகர்கோவில் எக்ஸ்பிரசில் இணைப்பு ரெயில்களை மீண்டும் இயக்க திட்டம் உள்ளதா? அப்படியானால், அதன் விவரங்கள் இல்லையென்றால், அதற்கான காரணங்கள்; சென்னைக்கும் தூத்துக்குடிக்கும் இடையில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயிலை அறிமுகப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளதா? அப்படியானால், அதன் விவரங்கள் என்ன? இல்லையென்றால், அதற்கான காரணங்கள் என்ன?”
இவ்வாறு கனிமொழி கூறினார்.
இதற்கு மத்திய ரெயில்வே, தகவல் மற்றும் ஒளிபரப்பு மற்றும் மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதில் அளித்து கூறியதாவது:-
சென்னை – தூத்துக்குடி இடையே தற்போது 12693/12694 சென்னை எழும்பூர் – தூத்துக்குடி பேர்ல் சிட்டி எக்ஸ்பிரஸ் தினசரி சேவை இயக்கப்படுகிறது. மேலும், பயணிகளின் வசதிக்காக, இணைப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
அதாவது. 56724/56723 வாஞ்சி மணியாச்சி – தூத்துக்குடி பயணிகள் ரெயில் 16127/16128 சென்னை எழும்பூர் – குருவாயூர் எக்ஸ்பிரஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.

அதேபோல, 56725/56726 தூத்துக்குடி – வாஞ்சி மணியாச்சி பயணிகள் ரெயில் 22667/22668 நாகர்கோவில் – கோயம்புத்தூர் எக்ஸ்பிரஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இவை தவிர தூத்துக்குடிக்கு வந்தே பாரத் ரயில் உள்ளிட்ட புதிய ரெயில் சேவைகளை அறிமுகப்படுத்துவது என்பது புதிய ரெயில்களுக்கான போக்குவரத்து தேவை, செயல்பாட்டு சாத்தியக் கூறுகள், நிதி உள்ளிட்ட வளங்கள் கிடைக்கும் தன்மை ஆகியவற்றைப் பொறுத்து ரெயில்வேயின் செயல் திட்டத்தில் இடம்பெறும்”
இவ்வாறு அவர் கூறினார்.
