கோவில்பட்டி கல்லூரியில் நடந்த முகாமில் தேர்வு: 24 பேருக்கு இலவச கண்புரை அறுவை சிகிச்சை

கோவில்பட்டி கோ வெங்கடசுவாமி நாயுடு கல்லூரியும் தூத்துக்குடி மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம் நிதி உதவியுடன் கோவில்பட்டி அரவிந்த் கண் மருத்துவமனையும் இணைந்து கல்லூரி சமூகப் பொறுப்பு திட்டத்தின் கீழ் இலவச கண் பரிசோதனை மற்றும் சிகிச்சை முகாம் நடைபெற்றது.
கல்லூரி அரங்கத்தில் நடைபெற்ற இந்த முகாமை கல்லூரி செயலர் மகேந்திரன் தொடங்கிவைத்தார். கல்லூரி முதல்வர் முனைவர் சுப்புலட்சுமி, சுயநிதி பாடப்பிரிவுகளின் இயக்குனர் வெங்கடாசலபதி ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.

கண் மருத்துவர்கள் கீர்த்தனா மற்றும் ரிங்சன் ஆகியோர் தலைமையிலான மருத்துவக்குழுவினர் பொது மக்களுக்கு கண் பரிசோதனை செய்தனர். இம் முகாமில் 150 க்கும் மேற்பட்டவர்கள் கண் பரிசோதனை மேற்கொண்டு பயன் அடைந்தனர். இவர்களில் 24 பேர் கண்புரை அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டு அழைத்து செல்லப்பட்டனர்,., மறுநாள் அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது.
முகாமிற்கான ஏற்பாடுகளை கல்லூரி சமூகப் பொறுப்பு திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் சரவண செல்வக்குமார், சிவராமசுப்பு, மின்னணுவியல் துறை பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் செய்திருந்தனர்.
