• April 4, 2025

மன நிம்மதியும், மகிழ்ச்சியும் தரும் சோமவார விரதம்

 மன நிம்மதியும், மகிழ்ச்சியும் தரும் சோமவார விரதம்

சிவபெருமானை வழிபடுவதற்கு திங்கட்கிழமை மிக உகந்த தினமாகும். சிவபெருமானுக்கு உகந்த நாள், சோமவாரம் ஆகும்.

திங்கட்கிழமையைத் தான் சோமவாரம் என்று அழைப்பார்கள். சோம என்றால் பார்வதியுடன் கூடிய சிவபெருமான் என்றும், சந்திரன் என்றும் பொருள்படும்.

 கொடிய நோயால் பாதிக்கப்பட்ட சந்திரன், தன் நோய் குணமாக வேண்டி சிவபெருமானை நினைத்து தவம் இருந்தான். சந்திரனின் தவத்தால் மகிழ்ந்த சிவபெருமான், சந்திரனின் நோயை நீக்கியதுடன், நவகிரகங்களில் ஒருவராக திகழும் வாய்ப்பையும் வழங்கினார்.

அப்போது சந்திரன், தனது வாரத்தில், மக்கள் விரதம் இருந்து வழிபட்டால் தாங்கள் நல்ல பலனை வழங்க வேண்டும் என்று பரமேஸ்வரனை வேண்டிக்கொண்டான். அதன்படி தோன்றியதே சோமவார விரதமாகும்.

சோமவார விரதத்தை கடைபிடிக்க நினைப்பவர்கள், திங்கட்கிழமைதோறும் அதிகாலையில் துயிலெழுந்து, வீட்டின் பூஜையறையில் சிறிய அளவில் இருக்கும் சிவலிங்கத்திற்கு பூக்கள் சூட்டி, உங்கள் நெற்றியில் திருநீறு பூசிக்கொள்ள வேண்டும்.

சர்க்கரை பொங்கல், பாயசம் போன்ற உணவுகளை படைத்து, சிவனுக்கு நைவேத்தியம் செய்து, சிவ மந்திரங்கள், சிவ புராணம் போன்றவற்றை படித்தல் வேண்டும்.

இந்த விரதம் மேற்கொள்பவர்கள் மூன்று வேளை ஏதும் உண்ணாமல் இருப்பது சிறப்பு என்றாலும், வேலை, தொழில் போன்றவற்றில் ஈடுபடுபவர்கள் மூன்று வேளையும் உப்பு சேர்க்காத உணவை சாப்பிடலாம் அல்லது பால், பழங்கள் உண்ணலாம்.

அன்றைய தினம் முழுவதும் காலை முதல் மாலை வரை சிவ ஸ்லோகம் மனதிற்குள் சொல்லி வர வேண்டும்.

 பின்பு மாலையில் கோவிலுக்கு சென்று சிவனுக்கு பால் அபிஷேகம் மற்றும் அர்ச்சனை செய்து வழிபட்டு, வீடு திரும்பிய பின்பு சிவனுக்கு நைவேத்தியம் செய்த பிரசாதங்களை சாப்பிட்டு விரதத்தை முடிக்க வேண்டும்.

 ஒரு சிலருக்கு தொடர்ச்சியாக 16 திங்கட்கிழமைகள் விரதம் மேற்கொள்ள முடியாத நிலை உண்டாகிறது. அப்படிப்பட்டவர்கள், விரதம் மேற்கொள்ளாத திங்கட்கிழமைக்கு அடுத்த திங்கட்கிழமைகளில் சிவனை வழிபட்டு விரதத்தை தொடரலாம்.

இதுபோல் தொடர்ந்து 16 திங்கட்கிழமைகள் விரதம் கடைபிடித்து சிவபெருமானை வணங்குபவருக்கு சிவனின் ஆசி கிடைத்து, நினைத்தது நிறைவேறும்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *