தூத்துக்குடி மாவட்டத்தில் புதிதாக 12 சுகாதார நிலைய கட்டிடங்கள்; அமைச்சர் மா.சுப்பிரமணியன், கனிமொழி எம்.பி.திறந்து வைத்தனர்


தூத்துக்குடி மாவட்டத்தில் புதிதாக 12 சுகாதார நிலைய கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன.இவற்றின் திறப்பு விழா மற்றும் ஏரல் சமுதாய நல மையத்தில் பிரசவ அறை மற்றும் நவீன அறுவை சிகிச்சை அரங்கம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா ஆகியவை இன்று காலை ஒரே இடத்தில் நடைபெற்றது.
ஏறல் சமுதாய நல மையத்தில் நடந்த விழாவில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி ஆகியோர் ரூ. 5.29 கோடி மதிப்பில் புதியதாக கட்டப்பட்டுள்ள 12 சுகாதார நிலைய கட்டிடங்களை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தனர்.
மேலும், ஏரல் அரசு மருத்துவமனையில் அஸ்வினி பிசரிஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் சமூகப் பொறுப்பு நிதி மூலம் புதிதாக ரூ. 2.54 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள மகப்பேறு மருத்துவ அறை மற்றும் அறுவை சிகிச்சை அறைக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் கனிமொழி எம்.பி. ஆகியோர் அடிக்கல் நாட்டினர்.
விழாவில், கடந்த 2023 ஆம் ஆண்டு செய்த தொடர் மழையால் ஏரல் மருத்துவமனையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டபோது மகப்பேறு சிகிச்சைக்காக வந்த பெண் ஒருவருக்கு உடனடியாக சிகிச்சை அளித்த செவிலியர் ஜெயலட்சுமி, துணை செவிலியர் பிராட்டி அம்மாள் ஆகிய இருவரையும் கனிமொழி கருணாநிதி எம்.பி பாராட்டி நினைவு பரிசு வழங்கினார்.
விழாவில் கனிமொழி எம்.பி. பேசுகையில், “ மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்திற்காக ஐக்கிய நாடுகள் சபை பதக்கம் கிடைத்துள்ளது. வெளிநாடுகளில் சிகிச்சைக்காக மாதக் கணக்கில் காத்துக்கொண்டு இருக்க வேண்டும். ஆனால், தமிழ்நாட்டில் சுமார் 2 கோடி நபர்களுக்கு மேல் வீடு தேடிச் சென்று மருத்துவம் பார்க்கப்பட்டுள்ளது.”என்று குறிப்பிட்டார்.
விழாவில், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதா ஜீவன், மீன்வளம் – மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, தூத்துக்குடி கூடுதல் ஆட்சியர் மற்றும் திட்ட இயக்குநர் இரா.ஐஸ்வா்யா, தூத்துக்குடி மாவட்ட சுகாதார அலுவலர் ம.யாழினி, அஸ்வினி பிசரிஸ் பிரைவேட் லிமிடெட் இயக்குநர் எஸ்.கே.ஆறுமுகசாமி மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
