குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் பணி; பூமி பூஜையுடன் தொடக்கம்

இஸ்ரோ எனப்படும், இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்திற்கு,ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில், சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையம் உள்ளது. அங்கு இரு ராக்கெட் ஏவுதளங்கள் உள்ளன.
அங்கிருந்து, நம் நாட்டின் பாதுகாப்பு, தகவல் தொடர்பு உள்ளிட்ட சேவைகளுக்கு பயன்படும் செயற்கைக்கோள், பி.எஸ்.எல்.வி., – ஜி.எஸ்.எல்.வி., வகை ராக்கெட் உதவியுடன் செலுத்தப்பட்டு, புவி வட்ட பாதையில் நிலைநிறுத்தப்படுகின்றன.
மற்ற நாடுகளை விட, இந்தியாவில் குறைந்த செலவில் செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்படுகின்றன. அதனால், பல நாடுகளும், இஸ்ரோ வாயிலாக செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்த ஆர்வம் காட்டுகின்றன.
இதற்காக கூடுதல் ராக்கெட் ஏவுதளம் அமைக்க இஸ்ரோ முடிவு செய்து, நாடு முழுதும் பல்வேறு இடங்களில் ஆய்வுகள் நடத்தியது.
அதன் அடிப்படையில், காற்றின் வேகம் குறைவு, மழைப்பொழிவு குறைவு, புவி வட்ட பாதைக்கு மிக அருகில் இருப்பது என்பன உள்ளிட்ட காரணங்களால் துாத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் தேர்வு செய்யப்பட்டது.
2024 -ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழகம் வந்த பிரதமர் மோடி புதிய ராக்கெட் ஏவுதளத்திற்கு அடிக்கல் நாட்டி இருந்தார். இந்த புதிய ராக்கெட் ஏவுதளம் அமைக்க 2,233 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு உள்ளன.
குலசேகரன்பட்டினத்தில், இஸ்ரோ சார்பில் புதிய ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
ராக்கெட் ஏவுதளம் அமைக்க கையகப்படுத்தப்பட்ட நிலத்தில், 6 கோடி ரூபாய் செலவில் சுற்றுச்சுவர் அமைக்கப்பட உள்ளது.
இந்நிலையில் குலசேகரப்பட்டினத்தில் நேற்று பூமி பூஜையுடன் கட்டுமான பணிகள் தொடங்கின. பூமி பூஜை நிகழ்ச்சியில் . இஸ்ரோ இயக்குநர் மற்றும் அதிகாரிகள் என பலரும் வந்திருந்தனர்.
பூமி பூஜையுடன் தொடங்கிய பணிகள் பணிகள் அடுத்த ஆண்டு முழுமையாக நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அங்கு, 2025 – 26ல், எஸ்.எஸ்.எல்.வி., எனப்படும், சிறிய வகை ராக்கெட் வாயிலாக செயற்கைக் கோள்கள் விண்ணில் ஏவப்பட உள்ளன.
