மருத்துவ குணம் கொண்ட “மைக்ரோகிரீன்” கீரை- நீங்களும் வளர்க்கலாம்

அதிக மருத்துவ குணம்கொண்டது “மைக்ரோகிரீன்” என்னும் “பேபி” கீரை. நம்முடைய பொன்னான நேரத்தை பயனுள்ளதாக மாற்றுவதற்கு நம் வீட்டிலேயே குறைந்த செலவில் இந்த கீரையை மிக எளிமையான முறையில் வளரப்பது பற்றி கோவில்பட்டி, முன்னாள் வேளாண் கல்வி ஆசிரியர் கோ. சுரேஷ்குமார், இந்த சிறப்பு கட்டுரையில் விளக்குகிறார்…
பொதுவாக கீரைகள் நமது அன்றாட உணவில் பெரும் பங்கு வகிக்கிறது. இலைக் காய்கறி வகையை சேர்ந்தது. இவற்றின் இலைகளும், தண்டுகளும் இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, வைட்டமின் சி போன்ற சத்துகளை அதிக அளவில் கொண்டுள்ளன. கீரைகளில் புரதம், அத்தியாவசிய அமினோ அமிலங்கள், நார்ச்சத்து போன்றவை உள்ளன.
நமது அன்றாட உணவில் குறைந்தபட்சம் 100 கிராம் பச்சை இலைக் காய்கறிகளை எடுத்துகொள்ள வேண்டும் என்று உணவியல் வல்லுநர்கள் பரிந்துரைக்கின்றனர். இன்றைய காலகட்டத்தில் கீரை வகைகளின் தேவையும் அதிகரித்துள்ளது. குறைந்த காலத்தில் வளர்ச்சி கொண்ட கீரைகளை படித்த வேலையில்லா இளைஞர்கள் மற்றும் குடும்ப பெண்கள் ஒரு குறைந்த இடத்தில் வீட்டின் உட்புறங்களிலோ அல்லது வெளிப்புறங்களிலோ சிறிய குடில் அமைத்து சிரமமின்றி எளிதாக வளர்க்கலாம்.
அதே நேரத்தில் நல்ல முழுமையான ஈடுபாடு இருந்தால் இதை சுயதொழிலாகவும் நாம் மாற்றலாம். நல்ல வருமானம் ஈட்டலாம். எனவே நம் அன்றாட வீட்டிற்கு தேவையான “பேபி”கீரைகளை வளர்த்து நம் ஆரோக்கியத்தை நாமே மீட்டு எடுப்பதற்கு சில மணி நேரத்தை நல்ல பயனுள்ளதாக மாற்றி நமது குடும்ப உறுப்பினர்கள் உடல் நலத்தை பாதுகாத்துக்கொள்ளலாம்.
“மைக்ரோகிரீன்” என்பது ஒரு இளம் தண்டுகள் மற்றும் பச்சை இலைகள் கொண்ட 3-10 செ.மீ உயரம் வளர்ந்த உண்ணக்கூடிய காய்கறி வகை கீரையாகும். இதனை முளைத்த 7–12 நாட்களுக்குப் பிறகு அறுவடை செய்து உணவாகப் பயன்படுத்தலாம். வீட்டில் “மைக்ரோகிரீனை” வளர்ப்பதற்கு தரமான விதை,மண்புழு உரம் ,பிளாஸ்டிக் டிரேக்கள் தேவைப்படும்.
இதனை வளர்ப்பதற்கு விலை உயர்ந்த உபகரணங்களோ அல்லது அதிக தண்ணீரோ தேவைப்படாது. ஒரு நாளைக்கு 2.5 லிட்டர் தண்ணீரை வைத்து 50 வகையான இளம் தளிர் கீரைக்கட்டுகளை உற்பத்தி செய்யலாம். அதாவது முள்ளங்கி,வெந்தயம் ,கேரட் ,பூண்டு, வெங்காயம் அமரான்தஸ், பீட்ருட் , கோதுமை, பயறு வகைகள் உட்பட பல்வேறு கீரை விதைகளை வீட்டில் பயன் பாட்டில் இருந்து தூக்கி எறியப்படும் ப்ளாஸ்டிக் வாளி, பெரிய மக், பாட்டில்கள்,குழித்தட்டு டிரே, ஆகியவற்றில் மண்புழு உரம், இயற்கை சாண உரம், தாய்மண், ஆற்றுமண் ஆகிய கலவையை 5 செ.மீ. உயரம் செய்து மேலே விதைகளை தூவி லேசான மேல் மண் இட்டு, கைகளால் தண்ணீர் தெளித்து 10செ.மீ. உயரம் வரை வளர்த்து அறுவடை செய்யலாம்.
“மைக்ரோகிரீன்கள்” நறுமணமுள்ள சத்தான ஊட்டச்சத்து நிறைந்த நோய் எதிர்ப்புசக்தி கொண்ட ஒரு ஆக்ஸிஜனேற்றி உணவாகும் என்பது குறிப்பிட தக்கது. இதனை சூப்கள், ஆம்லெட்டுகள், கறிகள், இட்லி, தோசை,சப்பாத்தி சான்விச், சாலேட்டுகள் மற்றும் பிற சூடான உணவுகளில் கலந்து சாப்பிடுவதால் நீரிழிவு நோய், இதய நோய் “ட்ரைகிளிசரைடு” மற்றும் எல்.டி.எல் கொழுப்பின் அளவைக் குறைக்கலாம்.
நாம் பெரும்பாலும் வீட்டுக்கு தேவையான முதிர்ச்சியடைந்த கீரைகளைவிட “மைக்ரோகிரீன்” 9 மடங்கு அதிக சத்து நிறைந்து காணப்படுகிறது.
ஆகையால் இனிவரும் காலங்களில் நாம் அதிக அளவு காய்கறிகளை அதிக விலை கொடுத்து கடைகளில் வாங்காமல் ஊட்டச்சத்து நிறைந்த “மைக்ரோகிரீனை” நம் வீடுகளில் எளிதாக வளர்த்து, செலவை குறைத்து, நம் உடல் ஆரோக்கியத்தையும், எதிர் வரும் ஆபத்தான நோய் தாக்குதலிருந்து பாதுகாத்தும் நமது பொருளாதாரத்தையும் உயர்த்தி கொள்ளலாம்.
இந்த கீரை வளர்ப்பு பற்றிய மேலும் இலவச ஆலோசனை பெறுவதற்கு 9443620932 என்ற கைபேசியில் தொடர்பு கொண்டு மேலும் விபரம் அறியலாம்.

1 Comment
Thanks sir