சர்வதேச தேக்வாண்டோ நடுவர் விருது பெற்ற திருச்செந்தூர் பெண் போலீஸ் கிருஷ்ணவேணிக்கு சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் வாழ்த்து

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பெண் காவலராக பணிபுரிந்து வருபவர் கிருஷ்ணவேணி. தேக்வாண்டோ விளையாட்டு வீராங்கனையான கிருஷ்ணவேணி மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரில் நடைபெற்ற 133வது சர்வதேச தேக்வாண்டோ நடுவர் பயிற்சி முகாமில் கலந்து கொண்டார்.
பயிற்சியை தொடர்ந்து தேக்வாண்டோ விளையாட்டில் தமிழ்நாட்டின் முதல் பெண் சர்வதேச நடுவராக தேர்ச்சி பெற்று தமிழ்நாடு தேக்வாண்டோ அசோசியேசன் சார்பாக விருது பெற்றார்.
மேலும் தூத்துக்குடி தருவை மைதான விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மாவட்ட அளவிலான தேக்வாண்டோ விளையாட்டு போட்டியில் கலந்து கொண்டு சீனியர் பெண்கள் 46 முதல் 49 எடை பிரிவில் வெற்றி பெற்று தங்கப்பதக்கம் பெற்றார்.
தூத்துக்குடியில் நடைபெற்ற தேக்வாண்டோ போட்டியில் வெற்றி பெற்று தங்கப்பதக்கம் மற்றும் சர்வதேச தேக்வாண்டோ நடுவர் பயிற்சி முகாமில் கலந்து கொண்டு தமிழ்நாட்டில் முதல் பெண் சர்வதேச நடுவர் விருது பெற்ற கிருஷ்ணவேணியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.
