பெஞ்சல் புயலால் தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள பாதிப்பை கண்டு மனமுடைந்தேன்: ராகுல் காந்தி
![பெஞ்சல் புயலால் தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள பாதிப்பை கண்டு மனமுடைந்தேன்: ராகுல் காந்தி](https://tn96news.com/wp-content/uploads/2024/12/ahulgandhi-850x560.webp)
பெஞ்சல் புயலால் விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது. இந்த கனமழையால் விழுப்புரம், கடலூர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட பகுதிகள் வெள்ள காடாய் காட்சியளிக்கின்றன. தொடர் கனமழையால் பெரும்பாலான பகுதிகளில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. இதனால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். சாலை, ரயில் பாதைகளிலும் மழைநீர் சூழ்ந்துள்ளதால் பொது போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, கனமழையால் திருவண்ணாமலையில் ஏற்பட்ட மண் சரிவில் சிக்கி 7 பேர் உயிரிழந்தனர். பெஞ்சல் புயலால் மொத்தமாக 12 பேர் உயிரிழந்ததாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், பெஞ்சல் புயல் பாதிப்புகள் குறித்து மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:- பெஞ்சல் புயலால் தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள பாதிப்பை கண்டு மனமுடைந்தேன். புயல் பாதிப்பால் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். தங்களின் உடைமைகளை இழந்தவர்களுக்கு ஆறுதலையும் கூறி கொள்கிறேன். காங்கிரஸ் தொண்டர்கள் உடனடியாக நிவாரண உதவிகளை மேற்கொள்ளவும் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)