பணமோசடியில் கைதானவருக்கு ஜாமீன் வழங்ககூடாது- காஞ்சீபுரம் கோர்ட்டில் நடிகை கவுதமி ஆஜராகி மனுதாக்கல்
நடிகை கவுதமி தனக்கு மற்றும் தனது சகோதரருக்கு சொந்தமான நிலங்கள் விற்பனை மற்றும் பணம் பரிவர்த்தனை தொடர்பாக பல்வேறு மோசடிகள் செய்துள்ளதாக காஞ்சிபுரம் மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் சில மாதங்களுக்கு முன்பு நேரில் ஆஜராகி புகார் மனு அளித்தார்.
அதன் அடிப்படையில் காஞ்சிபுரம் மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையினர் அழகப்பன் ரகுநாதன் மற்றும் சுகுமாரன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தனர். இதேபோல் மற்றொரு வழக்கில் அழகப்பன் மற்றும் பலராமன் ஆகியோர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் இரு வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் அழகப்பன் கடந்த மூன்று வாரங்களுக்கு முன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் இவர் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்துள்ள நிலையில், காஞ்சிபுரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் இரண்டில் நடிகை கவுதமியின் வழக்கறிஞர் சார்பில் நீதிபதி வாசுதேவன் முன்னிலையில் மனு தாக்கல் செய்தார்.
அப்போது மனுதாரர் மட்டுமே இம் மனுவினை தாக்கல் செய்ய வேண்டும் என அறிவுறுத்தியதின் பேரில் நேற்று காலை 11 மணியளவில் நடிகை கவுதமி நேரில் ஆஜராகி குற்றம் சாட்டப்பட்டுள்ள நபர் மீது 7 வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் அவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என மனு தாக்கல் செய்துள்ளார்.
ஏற்கனவே காவல்துறையில் சார்பில் அவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது எனவும் , மேலும் அவரை விசாரிக்க காவலில் எடுக்க நீதிமன்றத்தில் மனு மற்றும் கருத்து தெரிவித்ததுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இவ்வழக்கில் பலர் கைது செய்யப்பட வேண்டியுள்ள நிலையில் அவருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்குமா அல்லது இம்மனுக்களை ஏற்று தள்ளுபடி செய்யுமா என வரும் நாட்களில் தெரியவரும்.