கோவில்பட்டியில் திருநங்கைகள் விழிப்புணர்வு குறும்படத்தின் பாடல், முதல் போஸ்டர் வெளியீடு
திருநங்கைகள் குறித்த விழிப்புணர்வுக்காக ‘திரு’ என்ற 35 நிமிட குறும்படத்தை தூத்துக்குடியை சேர்ந்த அருந்ததி அரசு இயக்கி உள்ளார். இந்த படத்தை தூத்துக்குடி மாவட்ட காவல்துறையுடன் இணைந்து, வானம் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்த படத்தின் ஒரு பாடல் மற்றும் பர்ஸ்ட் லுக் (முதல் போஸ்டர்)வெளியீட்டு விழா கோவில்பட்டியில் நேற்று நடந்தது. குக்கூ, ஜோக்கர் திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் ராஜு முருகன் பாடல் மற்றும் முதல் போஸ்டர் ஆகியவற்றை வெளியிட்டார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
“திரு என்பது திருநங்கைகளின் வாழ்க்கை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் படமாக உள்ளது. இந்த திரைப்படத்தில் நாங்களும் உசுரு தான் என்ற பாடலை வெளியிட்டுள்ளேன். சமூகத்தில் வார்த்தையில் இருந்து தான் வாழ்க்கை தொடங்குகிறது. அப்படி சாதிய ரீதியாகவும், மற்ற அனைத்து தளங்களிலும் ஒடுக்கப்பட்ட மனிதர்களை, அடுத்தகட்டத்துக்கு நகர்த்தி செல்வது தான் ஒரு நல்ல படைப்பின் வேலையாக இருக்கும் என நினைக்கிறேன்.
ஏதோ காலத்தில் வெவ்வேறு பெயர்களால் அழைக்கப்பட்ட திருநங்கையர்கள், இன்றைக்கு திருநங்கையர் என்று அழைக்கக்கூடிய சூழல் உருவாகி இருக்கிறது. எத்தனையோ தோழர்கள் சேர்ந்து தான் விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளனர். அந்த வகையில் இந்த ‘திரு’ படம் திருநங்கையர்களின் வாழ்க்கையில், ஒடுக்கப்பட்டவர்களின் வாழ்க்கையில் ஒளிபாய்ச்சும் ஒரு படைப்பாக இருக்கும் என நம்புகிறோம். இந்த படத்துக்கும் இந்த பாடலுக்கும் இப்படியான நிகழ்வுகளுக்கு மக்களின் ஆதரவு தொடர்ந்து இருக்கும் என நம்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.