கோவிலுக்கு செல்லும் பாதையில் அங்கன்வாடி கட்டிடம் கட்டுவதற்கு எதிர்ப்பு
கோவில்பட்டி அருகே ஈராச்சி கிராமத்தைச் சேர்ந்த மூர்த்தி, செண்பகராஜன், தமாகா மாவட்ட தலைவர் ராஜகோபால், தமிழ் பேரரசு கட்சி மாவட்ட செயலாளர் வேல்முருகன் மற்றும் கிராம மக்கள் நேற்று காலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு, அங்கன்வாடி கட்டிடத்தை ஊருக்குள் கட்ட வேண்டுமென வலியுறுத்தி கோஷமிட்டனர்.
தொடர்ந்து துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அனந்தலட்சுமியிடம் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறி இருந்ததாவது:-
ஈராச்சி கிராமத்தில் கோவிலுக்கு செல்லும் பாதையில் அங்கன்வாடி கட்டிடம் கட்டுவதற்கு ஜேசிபி இயந்திரம் மூலம் ஒப்பந்தக்காரர் குழி தோண்டி, கட்டிடம் கட்ட முயற்சி எடுத்து வருகிறார். இந்த பாதை 100 ஆண்டுகளுக்கு மேலாக கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். தற்போது குழி தோண்டப்பட்டுள்ளதால் கோவிலுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து அறிந்த ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் கிராமத்துக்கு வந்து ஆய்வு செய்து, இந்த இடம் நாங்கள் தேர்வு செய்யவே இல்லை எனறு தெரிவித்தனர். ஆனால், ஒப்பந்தக்காரர் காழ்ப்புணர்ச்சியோடு இங்கு கட்டிடம் கட்ட முயற்சித்து வருகிறார். எனவே, அங்கன்வாடி கட்டிடத்தை மாற்று இடத்தில் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.