• May 9, 2024

தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காமல் செய்தவர்கள்; திருநாவுக்கரசர் அறிக்கை

 தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காமல் செய்தவர்கள்; திருநாவுக்கரசர் அறிக்கை

திருச்சி தொகுதி பாராளுமன்ற தொகுதி உறுப்பினராக பணியாற்றியவர் திருநாவுக்கரசர். இந்த முறை அவருக்கு காங்கிரஸ் சார்பில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படவில்லை. இதனால் விரக்தி அடைந்துள்ள திருநாவுக்கரசர் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

இந்தியாவிலேயே காங்கிரஸ் வேட்பாளர்களில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்த திருச்சி பாராளுமன்ற தொகுதி வாக்காளர்கள் அனைவருக்கும் நன்றியை மீண்டும் காணிக்கை ஆக்குகிறேன்,

கடந்த 5 ஆண்டுகளில் கொரோனா தொற்றால் பாதிப்புக்குண்டான சுமார் ஒன்றரை ஆண்டுகள் நீங்கலாக எனது தொகுதி வளர்ச்சி நிதியில் இருந்து சுமார் ரூ, 17 கோடி மக்களின் நலனுக்காகவும் மற்றும் மக்கள் நலப்பணிகளுக்காகவும்  இத்தொகுதியில் செலவிடப்பட்டுள்ளது.

288 பணிகள் ஆறு சட்டமன்ற தொகுதிகளிலும் என்னால் செய்து முடிக்கப்பட்டுள்ளது. கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவர்கள் சேர்க்கை தொடங்கி அணைத்து பணிகளிலும் எந்த லஞ்ச ஊழல் புகார்களுக்கும் ஆட்படாமல் நேர்மையாகவும், நாணயமாகவும் மக்கள் பணியாற்றி உள்ளேன்.

திருச்சியில் செயல்பட்ட எனது நாடாளுமன்ற அலுவலகத்தில் இருந்தும் சென்னை, டெல்லி அலுவலகத்தில் இருந்தும் எனது சுற்றுப்பயணத்திலும் மக்கள் அலுவலகம் வந்தும் அனுப்பிய வகையிலும் பெறப்பட்ட சுமார் பத்தாயிரம் மனுக்களை மத்திய மாநில அமைச்சர்களுக்கும், உரிய அரசு துறைகளுக்கும் அனுப்பி பல்வேறு விதமான நலப்பணிகளை செய்துள்ளேன்,

அதே போல் பெறப்பட்ட அனைத்து மனுக்கள் மீது எடுக்கப்பட நடவடிக்கைகள் குறித்து மனுதாரர்களுக்கு கடிதம் வாயிலாக தெரிவித்து உள்ளேன்,

பாராளுமன்றத்தில் 70 சதவீத வருகை பதிவோடு 37 விவாதங்களில் பங்கேற்றுள்ளேன். ஜீரோ அவர் விதி என் 377 மற்றும் 358 வினாக்கள் 4 தனிநபர் மசோதாக்கள் கொண்டு வந்து பாராளுமன்றத்தில் உரையாற்றி உள்ளேன்,’திருச்சியை இரண்டாவது தலைநகராக்க தொடர்ந்து வலியுறுத்தி வந்தேன்.தமிழகத்தின் மையபகுதியான திருச்சியை மையமாக கொண்டு எனது அரசியல் செயல்பாடுகள் தொடர்ந்து இருக்கும்.

மக்கள் என்னை எப்போதும் சந்திப்பது போலவும், தொலைபேசி வாயிலாகவும் திருச்சி அலுவலகத்திலும் எப்போதும் போல் என்னை சந்திக்கலாம். தொடர்பு கொள்ளலாம்.
இத்தேர்தலில் நான் மீண்டும் போட்டியிட விரும்பியவர்களுக்கும், என் வாய்ப்புக்காக உதவிட முயன்றவர்களுக்கும், நாடாளுமன்ற உறுப்பினராக நான் தொடரக்கூடாதென இத்தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிட்டாமல் போக முயன்றவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்,’

தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், தர்மம் மறுபடியும் வெல்லும் .

இவ்வாறு திருநாவுக்கரசர் கூறி இருக்கிறார்,.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *