நிலுவையில் உள்ள மசோதாக்கள்: உச்சநீதிமன்ற யோசனைப்படி கவர்னர் ரவி -முதல் அமைச்சர் ஸ்டாலின் சந்திப்பு
சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் வழங்காமல் கிடப்பில் போட்டுள்ளதாக கூறி தமிழ்நாடு அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுத்தது.
இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, நிலுவையில் உள்ள மசோதாக்கள் தொடர்பாக கவர்னர் மற்றும் முதல்-அமைச்சர் இருவரும் அமர்ந்து பேசலாமே? என யோசனை வழங்கியது.
இதையடுத்து கவர்னர் ஆர்.என்.ரவியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் சந்தித்தார். சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் இந்த சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பின்போது, நிலுவையில் உள்ள 10 மசோதாக்கள் தொடர்பாக இருவரும் கலந்து ஆலோசித்தனர்.
இந்த சந்திப்பின்போது, முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினுடன் அமைச்சர்கள் துரைமுருகன், தங்கம் தென்னரசு, ரகுபதி, ராஜகண்ணப்பன் ஆகியோர் சென்று இருந்தனர்.
இந்த சந்திப்பை தொடர்ந்து நிலுவையில் உள்ள மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் கிடைக்குமா? என்பது குறித்த கேள்வி நிலவி வருகிறது.