சினிமாத்துறையில் வரலாற்று சாதனை படைத்தவர் விஜயகாந்த்
மறைந்த விஜயகாந்த், சினிமாத்துறையில் வரலாற்று சாதனை படைத்தவர். மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் 1952-ம் ஆண்டு, ஆகஸ்டு 25-ம் தேதி அழகர்சாமி-ஆண்டாள் தம்பதியருக்கு மகனாக பிறந்தார் விஜயராஜ் என்கிற விஜயகாந்த்.
சிறு வயது முதலே சினிமாமீது இருந்த ஆர்வத்தின் காரணமாக, பல பள்ளிகள் மாறியும் அவரால் பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படிக்க முடிந்தது. அதேநேரம் தான் விரும்பிப் பார்க்கும் எம்.ஜி.ஆரின் படங்களை பார்த்து வந்து அதுபற்றி விவரிக்கும் அளவுக்கு சினிமா மீது அவருக்கு ஆர்வம் இருந்தது.
படிப்பை நிறுத்திய பிறகு மதுரை கீரைத்துரையில் தன் தந்தையின் அரிசி ஆலையில் பணிபுரிந்தார். அந்த சமயம் நண்பர்களின் ஆதரவு, தனக்கிருந்த ஆர்வம் காரணமாக சினிமாவில் நடிப்பது என முடிவுசெய்து சென்னைக்கு வந்தார்.
பல்வேறு அவமானங்கள், போராட்டங்களுக்கு மத்தியில், 1979-ம் ஆண்டு எம்.ஏ.காஜாவின் இயக்கத்தில் வெளியான `இனிக்கும் இளமை’ படத்தில் நடித்து, தன் சினிமா பயணத்தைத் தொடங்கினார். சினிமாவுக்காக விஜயராஜ் என்ற தன் பெயரை விஜயகாந்த் என மாற்றிக்கொண்டார்.
`சட்டம் ஒரு இருட்டறை’, `தூரத்து இடிமுழக்கம்’, `அம்மன்கோவில் கிழக்காலே’, `உழவன் மகன்’, `சிவப்பு மல்லி’ என வெற்றிப்படங்களைக் கொடுத்து தமிழின் முன்னணி கதாநாயகனாக வலம்வந்தார். கிட்டத்தட்ட 150-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த விஜயகாந்த், 1984-ல் மட்டும் ஒரே ஆண்டில் 18 படங்களில் நடித்து சினிமாத்துறையில் வரலாற்று சாதனை புரிந்தார்.
1999-ம் ஆண்டு நடிகர் சங்க தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார் விஜயகாந்த். பல ஆண்டுகளாக அடைக்க முடியாமல் இருந்த நடிகர் சங்க கடனை சிங்கப்பூர், மலேசியா என தமிழர்கள் அதிகம் வசிக்கும் வெளிநாடுகளில் நட்சத்திர கலை விழாக்கள் நடத்தி வட்டியும் முதலுமாக அடைத்தார்.
மேலும், நலிவடைந்த கலைஞர்களுக்கு உதவி செய்வதற்காக ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகம் செய்து, பெரும் தொகையை வங்கியில் டெபாசிட் செய்தார். 2002-ம் ஆண்டு காவிரி நதிநீர் பிரச்சினை உச்சத்தில் இருந்தபோது, அனைத்து நடிகர்களையும் ஒன்றிணைத்து `நீர் தராத கர்நாடாகாவுக்கு மின்சாரம் இல்லை!’ என்கிற முழக்கத்துடன் நெய்வேலியில் போராட்டத்தை நடத்தினார்
1965-ம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் தனது சிறு வயதிலேயே விஜயகாந்த் பங்கேற்றதாக சொல்லப்படுகிறது. அதேபோல, 1984-ம் ஆண்டு ஈழத்தமிழர்கள் மீதான படுகொலையை கண்டித்து சக நடிகர், நடிகைகளுடன் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் நடத்தி, படுகொலையை நிறுத்தவும், நீதி வேண்டியும் தமிழக கவர்னரிடம் மனு அளித்தார்.
பின்னர் 1986-ம் ஆண்டு அதே காரணங்களுக்காக சென்னை வட்டாட்சியர் அலுவலகத்தில் உண்ணாவிரதம் இருந்தார் விஜயகாந்த். அவரின் ரசிகர் மன்றத்தின் சார்பாக தமிழ்நாடு முழுவதுமுள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பும் ஈழத்தமிழர்களுக்காக உண்ணாவிரதம் மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து ஈழத்தமிழர்களுக்காகக் குரல்கொடுத்தும், 1989-களில் மண்டபம் உள்ளிட்ட முகாம்களில் அகதிகளாக வசிப்பவர்களுக்கு உதவிபுரிந்தும் வந்தார். ஈழத்தமிழர்கள் உணர்வை உணர்ந்தவராக, “ஈழத்தமிழர்கள் அழும்போது, என்னால் கொண்டாட்டத்தில் இருக்க முடியாது” என்று கூறி தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தை தவிர்த்தார். (பின்னாள்களில் அவரின் பிறந்தநாள் வறுமை ஒழிப்பு தினமாக அறிவிக்கப்பட்டு, ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன.
தனது 100-வது படத்துக்கு `கேப்டன் பிரபாகரன்’ என்றும் , தனது மூத்த மகனுக்கு `விஜய பிரபாகரன்’ எனவும் பெயர்வைத்து தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் மீதும், ஈழத்தின் மீதும் தனக்கிருந்த பற்றை பறைசாற்றினார்.
-SKTS திருப்பதி ராஜன்-