• May 9, 2024

நினைத்ததை நிறைவேற்றும் கழுகுமலை கழுகாசலமூர்த்தி

 நினைத்ததை நிறைவேற்றும் கழுகுமலை கழுகாசலமூர்த்தி

குன்றுதோறாடும் குமரக்கடவுள் குடிகொண்டிருக்கும் சிறந்த தலங்கள் பலவற்றுள் ஒன்று கழுகுமலை…கோவில்பட்டிக்கும் சங்கரன்கோவிலுக்கும் மத்தியில் உள்ள ஒரு சிறந்த முருகதலம்- செவ்வாய் தலம்- யாத்திரை தலம்- காணிக்கை தலமும்கூட.

நினைத்ததை நிறைவேற்றும், பகைவரும் உறவாடும் நிலைக்கு உயர்த்தும் திருத்தலம் முருகன் மேற்கு முகமாக வீற்றிருக்கும் மூன்று தலங்களில், இத்தலத்தை ராஜயோக தலம் என்று கச்சியப்பரால் போற்றப்பட்டுள்ளது

தமிழகத்தில் முருகனின் ஆறுபடை வீடுகளுக்கு அடுத்தாற்போல் சிறந்து விளங்கும் முருகத்தலங்களில் கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயில் தமிழகத்தின் தென்பழனி என்று அழைககப்படுகிறது..

கழுகுமலையில் அகிலாண்டேஸ்வரி சமேத ஜம்புநாதீஸ்வரர் கோயிலில் முருகப் பெருமான் எழுந்தருளியிருக்கிறார். அருணகிரிநாதர் திருப்புகழால் துதித்துள்ள தலங்களில் ஒன்று. சம்பாதி என்ற கழுகு முனிவர் இத்தல முருகனை வழிபட்டதால் இந்த ஊர் கழுகுமலை என்று பெயர் பெற்றது .

யானை படுத்திருப்பது போன்ற தோற்றமுடன் குன்றின் முன்பகுதி திகழ்கிறது. இங்குள்ள மலையில் கற்பாறையைக் குடைந்து மூர்த்தி அமைக்கப்பட்டிருப்பதால் இது குடைவரைக் கோவில் ஆகும்.

கோவிலுக்கு விமானம் கிடையாது. சுற்றுப் பிராகாரமும் கிடையாது. மலையைச் சுற்றித்தான் பிரகார வலம் வரவேண்டும். மலை 300 அடி உயரம் உள்ளது. கர்ப்பக் கிரகமும் அர்த்த மண்டபமும் மலையைக் குடைந்து செதுக்கப்பட்டுள்ளன.

ராமாயணக் காலத்தில் ஜடாயுவின் தம்பியான சம்பாதி, ஜடாயுவுக்கு ஈமக்கிரியை  செய்ய முடியாமல் போனதால் ஏற்பட்ட பாவத்திலிருந்து விடுபட இத்தலத்திலுள்ள சிவபெருமானை ஆம்பல் மலர்களால் பூஜித்து அவர் அருள் பெற்றான். 

அவன் தோஷம் நீங்க தந்தையாருக்கு முருகன் சிபாரிசு செய்ததாகவும், இந்த சம்பவம் தைப்பூசத் திருநாளன்று நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது.  அதனாலேயே இந்த ஆலயத்தில் தைப்பூச திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

சம்பாதி என்ற கழுகு பூஜித்த தலம் என்பதால், இந்த மலை கழுகாசலம் என்றும், கழுகுமலை என்றும் அழைக்கப்பட்டது. முருகப் பெருமான் கழுகாசலபதி எனப்பட்டார். கர்ப்பக் கிரகத்தில் வள்ளி- தெய்வானையோடு முருகன் காட்சியளிக்கிறார். மற்ற கோவில்களில் உள்ளதுபோல முருகனின் வாகனமான மயில் வலது பக்கம் அல்லாமல் இடது பக்கம் நோக்கி காட்சி அளிப்பது தனிச்சிறப்பு.

இங்குள்ள மூர்த்திக்கு ஒரு முகமும் ஆறு கரங்களும் உள்ளன. தென்னிந்தியாவிலேயே இம்மாதிரியான திருக்கோலம் கொண்ட முருகன் கோவில் இது மட்டுமே. தாரகாசுரனை வதம் செய்த கார்த்திகேயனே இக்கோலத்துடன் காட்சி அளிக்கிறார் என்று கூறப்படுகிறது.

முருகன் மேற்கு முகமாக இருக்கும் சந்நிதானத்தையுடைய மலை “சிவன் ரூபம்’ என்றும்; கிழக்கு முகமாக இருக்கும் மலை “சக்தி ரூபம்’ என்றும் வேதாகம நூல்களில் கூறப்பட்டுள்ளது.

கந்த புராணத்தின் ஆசிரியர் கச்சியப்பர், குன்று தோறாடிய மேற்கு முகமாக உள்ள தலங்கள் மூன்று என்றும்; அவற்றில் ராஜயோகமாக குமரன் வீற்றிருக்கும் தலம் கழுகுமலை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அகத்தியர் பொதிகை மலைக்குச் செல்லும்பொழுது இத்தலத்தில் தங்கி பூஜை செய்ததாகவும்; அகத்திய முனிவரின் இருப்பிடமான பொதிகை மலையை நோக்கி முருகன் தென்மேற்காக அமர்ந்துள்ளார் என்றும் கூறுவர்.

ராவணனால் ஜடாயு கொல்லப்பட, ராமன் ஜடாயுவுக்கு சகல கருமங்களும் செய்து ஜென்ம சாபல்யம் அடையச் செய்தார். இதை அனுமன் மூலம் அறிந்த ஜடாயுவின் சகோதரன் சம்பாதி ராமபிரானைத் தரிசித்து வணங்கி, “நான் என் சகோதரனுக்கு ஈமக்கிரிகைகள் செய்யாததால் கரும சண்டாளன் ஆகிவிட்டேன். அதற்கு ஒரு வழி கூறவேண்டும்’ என்று வேண்ட, ராமன் சம்பாதியை நோக்கி, “நீ கஜமுக பர்வதத்தில் மயில்மீது அமர்ந்திருக்கும் முருகனை- அவ்விடத்திலுள்ள ஆம்பல் தீர்த்தத்தில் முழ்கி பூஜை செய்தால் உன் சண்டாளத்தன்மை நீங்கி மோட்சம் அடைவாய்’ என்றார்.

அதன்படி சம்பாதி வணங்கி மோட்சம் பெற்ற தலம் இது. இத்தலம் கழுகுமலை, தென்பழனி, கழுகாசலம், உவணகிரி, கஜமுக பர்வதம், சம்பாதி ஷேத்திரம் என்று பல பெயர்களால் வழங்கப்படும்

கழுகாசலமூர்த்தி கோவில் அருகேயுள்ள மலையின் உச்சியில் பிள்ளையார் கோவிலும்  கோவிலுக்குச் செல்லும் வழியில் மூன்று சமண சிற்பத்தொகுதிகளும், அய்யனார் சுனையும் உள்ளன.

தென்னிந்தியாவின் எல்லோரா என அழைக்கப்படும் வெட்டுவான்  கோவிலின் பெரும்பாறையில் 25 அடி ஆழத்தில் சதுரமாகத் தோண்டி வேறெங்கும் காண முடியாத. சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய கண்கவர் கூடம் அமைக்கப்பட்டுள்ளது.

கோவிலில் அர்த்த மண்டபம் உள்ளது. கோவிலில் நான்கு பக்கங்களிலும் உமாமகேஸ்வரி, தட்சிணாமூர்த்தி, திருமால், பிரம்மா சிற்பங்கள் உள்ளன. சென்னிகுளம் அண்ணாமலை ரெட்டியாரை உலகறியச் செய்த அருமையும் இந்த கழுகாசல மூர்த்திக்கே சாரும்.

பாட்டுக்கொரு பாரதி இங்கு வந்து பாடியதும், திருப்புகழ் பாடிய அருணகிரிநாதராலும், சங்கீத மும்மணிகளில் ஒருவரான முத்துசாமி தீட்சிதராலும்,  கழுகுமலைப் பிள்ளைத் தமிழ் பாடிய சிதம்பரக் கவிராயராலும், நாடக உலகில் புகழ்பெற்ற எம்.ஆர். கோவிந்தசாமி அவர்களாலும், ஏனைய புலவர்களாலும் புகழ்பெற்றது கழுகுமலையாகும்.

கழுகாசமூர்த்திக்கு முகம் ஒன்று ,கரம்ஆறு, தன் இடது காலை மயிலின் கழுத்திலும் வலது காலை தொங்கவிட்டும் கையில் கதிர்வேலுடன் காட்சிதருகிறார். மயிலாக மாறிய இந்திரன் . பிற கோயில்களின் அசுரன் தான் மயிலாக இருப்பான் . எனவே மயிலின் முகம் முருகனுக்கு வலது பக்கமாக இருக்கும்.  இத்தலத்தில் இந்திரனே மயிலாக இருப்பதால் மயிலின் முகம் முருகனுக்கு இடப்பக்கமாக உள்ளது.

எனவே, சூரசம்ஹார நாட்களில் மயிலின் முகம் மூடப்பட்டிருக்கும். இத்தலத்தில் குருவும் (தட்சிதணாமூர்த்தி) முருகனும்(செவ்வாய்) இருப்பது சிறப்பு . எனவே குரு மங்கள ஸ்தலம் என்கிறார்கள். கழுகாசலமூர்த்தியை அகத்தியர் தினமும் பூஜிப்பதாக ஐதீகம்.

இங்கு முருகனுக்கு தனி பள்ளியறையும் , சிவ பெருமானுக்கு தனி பள்ளியறையும் அமைந்திருப்பது ஓர் தனிச்சிறப்பாகும். முருகன் சூரபத்மனை வதம் செய்வதற்காக இவ்வழியாக வந்தார்.அந்நேரத்தில் முனிவர்களையும், மக்களையும் சூரபத்மனின் தம்பி தாரகாசூரன் துன்புறுத்திக் கொண்டிருந்தான்.

முருகன் தாரகாசூரனை ஐப்பசி பஞ்சமி திதியில் வதம் செய்தார். வதம் செய்த களைப்பு தீர கஜமுகபர்வதத்தில் ஓய்வு எடுத்தார்.  அவருக்கு தங்கும் இடம் தந்தார் சம்பாதி அத்துடன் சூரபத்மனின் இருப்பிடத்தையும் காட்டினார்.

இதனால் மகிழந்த முருகன் சம்பாதிக்கு முக்திதந்தார். இதனால் சம்பாதி தன் சகோதரனுக்கு ஈமக்கிரியைகளை செய்ய முடியாத பாவம் நீங்கியது.கழுக முனிவரான சம்பாதி வசித்த கஜமுக பர்வதமே அவரது பெயரால் “கழுகுமலை’ எனப்பெயர் பெற்றது.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *