கோவில்பட்டி அருகே தீப்பெட்டி ஆலையில் தீவிபத்து; உடல் கருகி பெண் பலி

கோவில்பட்டியை அடுத்த சித்திரம்பட்டி மெயின்ரோட்டில் ராமசாமி என்பவருக்கு சொந்தமான தீப்பெட்டி ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் 100-க்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றி வருகிறார்கள்.
இன்று மதியம் ஆலையின் பின்புறத்தில் உள்ள குச்சி அரவை இயந்திரம் அறைக்கு முன்புறம் தொழிலாளர்கள் சிலர் அமர்ந்து உணவு அருந்தி கொண்டிருந்தார்கள். அப்போது குச்சி இயந்திரத்தில் திடீர் என தீப்பிடித்து அறை முழுவதும் பரவியது.
இந்த தீயில் சிக்கி மாரியம்மாள் என்ற பெண் உடல் கருகி சம்பவ இடத்திலேயே இறந்து போனார். கனகலட்சுமி என்ற பெண் தீயில் சிக்கி அலறினார். மற்ற தொழிலாளர்கள் அவரை காப்பாற்றினார்கள்.

இதற்கிடையே தீவிபத்து பற்றி தகவல் அறிந்து தீயணைப்பு படையினர் விரைந்து வந்தனர். அவர்கள் சுமார் 30 நிமிடம் போராடி தீயை முழுமையாக அணைத்தனர். தீயில் சிக்கி காயம் அடைந்த கனகலட்சுமியை கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இறந்து போன மாரியம்மாள் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள். கோவில்பட்டி மேற்கு போலீசார் மேலும் இது பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.
