தொழில் முனைவோர் ஆக மாறுவதற்கு பெண்கள் உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும்- மாவட்ட தொழில் மைய பொதுமேலாளர் சுவர்ணலதா
இந்திய தொழில் கூட்டமைப்பு தூத்துக்குடி கிளை சார்பில் பெண் தொழில் முனைவோர் 2-வது உச்சி மாநாடு நடைபெற்றது. இன்றைய வாய்ப்புகளை பயன்படுத்தி பெண்களை தொழில் முனைவோராக உருவாக்குவதற்காக இந்த மாநாடு நடத்தப்பட்டது.
புனித மரியன்னை மகளிர் கல்லூரியில் நடைபெற்ற இந்த மாநாட்டிற்கு இந்திய தொழில் கூட்டமைப்பு தூத்துக்குடி தலைவர் வெயிலா கே. ராஜா தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் ஜோஷி பெர்னான்டோ முன்னிலை வகித்தார்.
மாநாட்டில் தூத்துக்குடி மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் சுவர்ணலதா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவர் பேசுகையில் கூறியதாவது:-
இந்த மாநாட்டின் மூலம் பெண்கள் பலர் தொழில் முனைவோராக உருவாகி சாதனை பெற வேண்டும். பெண்கள் தங்களுக்கு இருக்கக்கூடிய திறன் மீது நம்பிக்கை கொண்டு தொழில் முனைவோராக உருவாக வேண்டும். பெண்கள் தொழில் முனைவோர் ஆவதன் மூலம் புதிய வேலை வாய்ப்புகள் சமூகத்தில் உருவாகும். பல்வேறு துறைகளில் தங்களிடம் இருக்கக்கூடிய புதிய சிந்தனைகளை வெளிக்கொண்டு வருவதன் மூலம் சமூக பொருளாதார மேம்படும். பெண்கள் இதற்கான இலக்கை நோக்கி தொடர்ந்து பயணிக்க வேண்டும்.
சிறு, குறு, நடுத்தர தொழில்களை தொடங்குவதற்காக ஸ்டார்ட் அப் இந்தியா, முத்ரா யோஜனா போன்ற திட்டங்களின் மூலமாக நிதி உதவியை பெறலாம். எனவே பெண்கள் அனைவரும் தொழில் முனைவோர் ஆக மாறுவதற்கு உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும் பெண்கள் தொழில் முனைவோர் ஆக மாறுவதால் பொருளாதாரம் மேம்படும் சமூக மாற்றம் ஏற்படும்.
இவ்வாறு சுவர்ணலதா பேசினார்.
மாநாட்டில் வாய்ப்புகளை எவ்வாறு எதிர்கொள்வது, பெண்கள் முன்னோக்கி செல்வதற்கான வெற்றிக் கதைகள் குறித்து பல்வேறு தொழில் முனைவோர்கள், ஆலோசகர்கள், வெற்றியாளர்கள் கருத்தரைகள் வழங்கினார்கள். மாநாட்டின் முடிவில் இந்திய தொழில் கூட்டமைப்பு துணைத் தலைவர் செலஸ்டின் வில்லவராயர் நன்றி கூறினார்.