குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு
![குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு](https://tn96news.com/wp-content/uploads/2023/06/353803001_787393642942842_6584784736606925901_n-850x560.jpg)
14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் அனைவருக்கும் கல்வி கிடைப்பதை உறுதி செய்திடவும்,குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திடவும் உலக குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் நாடு முழுவதும் ஜூன் 12-ந் தேதி கடைபிடிக்கப்படுகிறது.
தூத்துக்குடி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் சார்பில் கோவில்பட்டி வட்டார நூலகத்தில் உலக குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் இன்று (ஜூன் 12) கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி நடந்த இந்நிகழ்ச்சிக்கு பாரதியார் நினைவு அறக்கட்டளை தலைவர் முத்துமுருகன் தலைமை தாங்கினார்,.கோவில்பட்டி வட்டார நூலகர் அழகர்சாமி முன்னிலை வகித்தார். போட்டித் தேர்வு மாணவர் சூரிய பிரகாஷ் அனைவரையும் வரவேற்றார்.
![](https://tn96news.com/wp-content/uploads/2023/06/c99c386d-6686-4067-952d-10e7a8934554-1024x682.jpg)
தூத்துக்குடி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் பாதுகாப்பு அலுவலர் ஜேம்ஸ் அதிசயராஜ் கலந்து கொண்டு குழந்தைகள் பாதுகாப்பு குறித்த புத்தகங்களை நூலகர் அழகர்சாமியிடம் வழங்கினார்.
போட்டித் தேர்வு மாணவர்கள் 50க்கும் மேற்பட்டோர் இந்திய அரசியலமைப்பு விதிகளின்படி 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் கல்வி பெறுவது அடிப்படை உரிமை என்பதால் பள்ளிக்கு செல்வதை ஊக்கப்படுத்திடவும்,குழந்தைகளை ஒருபோதும் எந்த பணிகளிலும் ஈடுபடுத்த மாட்டேன் எனவும்,குழந்தை தொழிலாளர் முறையினை முற்றிலுமாக அகற்றிட சமுதாயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்திடவும்,குழந்தை தொழிலாளர் அற்ற மாநிலமாக தமிழகத்தை மாற்றிட பாடுபடவும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்..
இந்நிகழ்ச்சியில் இளம்புவனம் அரசு உயர்நிலைப்பள்ளி பட்டதாரிஆசிரியர் ராஜேந்திரன்,போட்டித் தேர்வு மாணவர்கள் அய்யம்பெருமாள்,செல்லத்துரை, உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நூலக பணியாளர் மல்லிகா நன்றி கூறினார்.
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)