இளையரசனேந்தலில் ஏழைகளுக்கு இலவச வீட்டுமனை வழங்க கோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

கோவில்பட்டி தாலுகா அலுவலகத்தை நேற்று காலையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் கோஷம் எழுப்பியவாறு திடீரென முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். கட்சி தாலுகா செயலாளர் ஜி. பாபு தலைமை தாங்கினார். அப்போது இளையரசனேந்தல் கிராமத்திலுள்ள ஏழை மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என கோஷம் எழுப்பினர். இதனால் அந்த அலுவலகம் முன்பு சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.

பின்னர் முற்றுகைப் போராட்டம் நடத்தியவர்கள் தாசில்தார் வசந்த மல்லிகாவை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில், ‘இளையரசனேந்தல் கிராமத்தில் உள்ள வீடு இல்லாத ஏழை மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா கேட்டு பலமுறை அதிகாரிகளிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, உடனடியாக அந்த கிராமத்திலுள்ள ஏழை, எளிய மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்ட வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.
இந்த மனுவை பெற்றுக் கொண்ட தாசில்தார் விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர். போராட்டத்தில் கட்சியின் மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் சேதுராமலிங்கம், நகரச் செயலாளர் சரோஜா, மாவட்ட குழு உறுப்பினர் பரமராஜ், நகர துணை செயலாளர் முனியசாமி நகர குழு உறுப்பினர் சண்முகவேல், இளையரச னேந்தல் கிளை செயலாளர் இன்னாசி முத்து மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
