• May 9, 2024

சிறுபான்மையினருக்கு ரூ.30 லட்சம் வரை தனி நபர் கடன் ; ஆட்சியர் செந்தில்ராஜ் தகவல்

 சிறுபான்மையினருக்கு ரூ.30 லட்சம் வரை தனி நபர் கடன் ; ஆட்சியர் செந்தில்ராஜ் தகவல்

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது :-
தூத்துக்குடி மாவட்டத்தில் கிறித்துவர், இசுலாமியர், சீக்கியர், சமணர், பார்சியர் மற்றும் புத்த மதத்தினர் ஆகிய சிறுபான்மையினருக்கு தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் தனிநபர்கடன் அதிகபட்சமாக ரூ.30 லட்சம் வரையிலும், கைவினை கலைஞர்களுக்கு ரூ.10 லட்சம் கடன், சுயஉதவிக் குழுக்களுக்கான சிறு தொழில் கடன் 15 லட்சம், கல்விக்கடன் 20 லட்சம் முதல் 30லட்சம் வரை குறைந்த வட்டி விகிதத்தில் கூட்டுறவு வங்கிகள் மூலமாக வழங்கப்பட்டு வருகின்றது.
ஏற்கனவே செய்து வரும் தொழிலை அபிவிருத்தி செய்வதற்கும் கடனுதவி வழங்கப்படும்.

தனிநபர் கடன்: இத்திட்டத்தில் ரூ.20 லட்சம் வரையில் ஆண்டிற்கு 6% வட்டி விகிதத்திலும், ரூ.20 லட்சத்திற்கு மேல் ரூ.30 லட்சம் வரையில் பெண்களுக்கு 6% மற்றும் ஆண்களுக்கு 8% வட்டி விகிதத்திலும் தனிநபர் கடன் வழங்கப்படும்.

சுய உதவிக்குழு கடன்: இத்திட்டத்தில் ஒரு குழுவிற்கு உச்சபட்சமாக ரூ.15 லட்சம் வரையில் கடன் வழங்கப்படும். ஒரு உறுப்பினருக்கு ரூ.1 லட்சம் வரையில் ஆண்டிற்கு 7% வட்டி விகிதத்திலும், ரூ.1லட்சத்திற்கு மேல் ரூ.1.50 இலட்சம் வரையில் பெண்களுக்கு 8% மற்றும் ஆண்களுக்கு 10% வட்டி விகிதத்திலும் கடன் வழங்கப்படும்.

கைவினைஞர்களுக்கான கடன்(விராசாட்): கைவினை கலைஞர்களுக்கு அதிக பட்சமாக நபர் ஒருவருக்கு ரூ.10லட்சம் வரை பெண்களுக்கு 4% மற்றும் ஆண்களுக்கு 5% வட்டி விகிதத்தில் கடன் வழங்கப்படும்.

கல்விக்கடன்: அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் இளங்கலை/முதுகலை/தொழிற்கல்வி தொழில்நுட்பக் கல்வி பயில்பவர்களுக்கு, ஆண்டிற்கு ரூ.4 இலட்சம் வீதம் 5 வருடங்களுக்கு அதிகபட்சம் ரூ.20 லட்சம் வரையில் 3% வட்டி விகிதத்திலும், வெளிநாடுகளில் பயில்பவர்களுக்கு ஆண்டிற்கு ரூ.6 லட்சம் வீதம் 5 ஆண்டுகளுக்கு அதிகபட்சம் ரூ.30லட்சம் வரையில் மாணவர்களுக்கு 8% மற்றும் மாணவியர்களுக்கு 5% வட்டி விகிதத்திலும் கடன் வழங்கப்படும்.

தகுதிகள்: மேற்படி கடன்கள் பெறுவதற்கு விண்ணப்பதாரர் 18 வயது பூர்த்தியடைந்தவராக இருத்தல் வேண்டும்.. குடும்ப ஆண்டு வருமானம் கிராமப்புறங்களில் வசிப்பவர்களுக்கு ரூ.98,000/- மற்றும் நகர்ப்புறங்களில் வசிப்பவர்களுக்கு ரூ.1,20,000/-க்கு மிகாமலும், கடன் தொகை ரூ.20 லட்சத்திற்கு மேல் பெற விரும்புபவர்கள் ஆண்டு வருமானம் ரூ.8,00,000/-ற்கு மிகாமலும் இருத்தல் வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒரு நபருக்கு மட்டுமே கடனுதவி வழங்கப்படும்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், தூத்துக்குடி மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம், தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, நகர கூட்டுறவு வங்கி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் விண்ணப்பப்படிவத்தை கட்டணமின்றி பெற்று, அவ்விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களுடன் தூத்துக்குடி இணை பதிவாளர் (கூட்டுறவு சங்கங்கள்), மத்திய/நகர/தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் விண்ணப்பித்து ஒப்புகை பெற்றுக் கொள்ளுதல் வேண்டும்.

வெண்மைப்புரட்சி ஏற்படுத்தும் வகையில் கறவை மாடு கொள்முதல் கடன் பெருமளவில் பெறுவதற்கு ஆவின் மேலாளரை அணுகுமாறும், இக்கடன் திட்டத்தில் பயனடைந்து பெருமளவு தொழில் முனைவோர்களாக மாறும் சூழலை ஏற்படுத்தி பொருளாரதாரத்தை மேம்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *