• May 19, 2024

உயிரின் விலை… (சிறுகதை)

 உயிரின் விலை… (சிறுகதை)

ரமேஷ்..அந்த ரெயில் தண்டவாளத்தை நோக்கி வேகமாக நடந்தான்..அதிகாலை நேரம்..ஆட்கள்  நடமாட்டம் அதிகம் இல்லை.அவனது கால்கள் விரைந்து நடந்தன.மனதில் ஒரு.. கோபம்….கண்களில் ஒரு வெறி..

அதிகாலையிலே அந்த எக்ஸ்பிரஸ் ரெயில் இந்த வழியாகத்தான் போகும்..பலமுறை பார்த்திருக்கேன்…இன்னைக்கும் சரியான நேரத்திலே வந்திடும்..முடிச்சிட வேண்டியதுதான்..

ஒரு வேளை சீக்கிரம் ரெயில் வந்திட்டா..மிஸ்ஆகிடும்..அடுத்த ரெயில்வர நேரமாகும்..கூட்டம் வந்திடும்..அப்புறம் ஒண்ணும் செய்யமுடியாது..

நடையின் வேகத்தை அதிகப்படுத்தினான்..அது அவன் போட்டிருந்த செருப்புக்கு பொறுக்கவில்லை..படக் என்று ஒரு செருப்பு அறுந்து..காலைவாரியது..ச்சே..நேரம் கெட்ட நேரத்திலே..இதுவேற உயிரைவாங்குது..இப்போ செருப்பா முக்கியம்..ம்..இரண்டு செருப்பையும் கழற்றி தூர வீசிவிட்டு வேகமாக நடந்தான்..

தண்டவாளத்தை நெருங்கினான்.அங்கே ஒரு வாலிபன் நின்று கொண்டிருந்தான்..ஏன் இவன் இங்கே நின்று கொண்டிருக்கிறான்.நமக்கு இடைஞ்சலாக  வந்து நிக்கிறானே….வேற இடத்துக்கு போயிடலாமா என்று ரமேஷ் யோசித்தான்.

அந்த நேரத்தில் அந்த வாலிபர்..ரமேசை பார்த்து..இவர் ஏன் இங்கே வந்திருக்கார் என்று நினைத்தபடி முறைத்துப்பார்த்தான்..ரமேசுக்கு கஷ்டமாக இருந்தது..என்னடா பண்ணுறது..செருப்பை வேறவிட்டுட்டு வந்திட்டோம்..காலில் கல்குத்தி வலிக்குது..என்ன செய்ய என்று யோசித்தான்..வாலிபன் தண்டவாளத்தையே உற்றுப்பார்த்தான்..

ரெயில் வருகிற நேரம்தானே..வரலையே என்று ரமேஷ் முணங்கியபோது..அந்த குறிப்பிட்ட எக்ஸ்பிரஸ் ரெயில் அரை மணி நேரம் தாமதமாக வரும் என்று அறிவிப்பு எதிரொலித்தது..அதை கேட்டதும்..அந்த வாலிபன்..ம்..ச்சே ரெயில் வரலையே..என்று ஏசினான். ரமேசுக்கும் ரெயில் தாமதாக வரும் என்பதால்..ஒன்றும் ஓடவில்லை.

தண்டவாளம் அருகே நின்ற வாலிபனை பார்த்து..பாத்தியளா..நாம ஏதிர்பார்க்கிற நேரத்திலே இந்த ரெயில் வராது..உங்களுக்கு தெரிஞ்சவங்க யாரும் ரெயிலில் வர்ராங்களா..வரவேற்க வந்திங்களா..என்று ரமேஷ் கேட்க..அந்த வாலிபர்..நான் யாரையும் வரவேற்க வரலை..தண்டவாளத்தில் பாய்ந்து தற்கொலை பண்ணவந்தேன் என்று கண்ணீர் வடித்தபடி சொன்னான்.

ரமேசுக்கு பகீர் என்றது..என்னடா..நாமதான் தற்கொலை பண்ணுறதுக்கு வந்தோம்..இவனும் அதுக்குத்தான் வந்தேங்கிறான் ..நமக்கு எங்கே போனாலும் இடைஞ்சல்தான் போல.. என்று மனதில் எண்ணியபடியே சரி..எதுக்கு தற்கொலை பண்ண நினைக்கிறான்..கேட்டுத்தான் பாப்போமே…ரமேஷ் அந்த வாலிபரிடம் கேட்டார்..

அவன் …பொல பொல வென்று கண்ணீரை கொட்டினான்..சார்..எம் பேரு..சுந்தர்..காலேஜில படிக்கேன்..ஒரு பொண்ணை லவ் பண்ணுறேன்..ஒருவாரமா அவா செல்போனிலே பேசவே இல்லை.சுவிட்ச் ஆப்..சுவிட்ச் ஆப்புன்னு வருது..அவா என்னை அவாயிடு பண்ணுறா..என்னால தாங்கமுடியல..அதான் ரெயில்முன்பாஞ்சி…என்று கதறினான்

.ரமேசுக்கு தூக்கிவாரிப்போட்டது.காதலி செல்போனில் பேசலங்கிறதுக்காக..தற்கொலை பண்ண நினைக்கிறானே..என்ன அபத்தமான முடிவு…சரி..அவனுக்கு அடவைஸ் பண்ணுவோம் என்று நினைத்தான்..

தம்பி..உயிர்விலை மதிக்க முடியாதது.போனா திரும்பி வராது..தற்கொலை ஏந்த பிரச்சினைக்கும் தீர்வல்ல..புரியுதா..உன்காதலி நேற்று  பேசலன்னா..இன்னைக்கு பேசுவா..நீ போயிட்டா…எப்படி பேசுவா..நம்பிக்கைதான் வாழ்க்கை என்று உற்சாகமூட்டினான்.

அந்த வாலிபர்..அப்படியா சொல்லுறீங்க..அதை நம்பலாமா என்றபோது அவனது செல்போன் அலறியது..அந்த வாலிபர் உற்சாகமாக..சார்..என் காதலி ..பேசுறா என்று உற்சாகத்தில் துள்ளினான்.ஏதிர்முனையில் பேசிய அவன் காதலி..ஏய் சுந்தர்..போன் ரிப்பேருடா..அதை ரிப்பேர் பாக்க கடையிலே கொடுத்திருந்தேன்.ரிப்பேர் பார்த்துதர காலதாமதமாயிட்டு..ரிப்பேர் பார்த்தவுடன்..உடனே உங்கிட்டதான் பேசுறேன்..நீதான் பேசலன்னா கோபப்படுவீய என்க..சுந்தர்..மெல்ல சிரித்தபடி..ச்சே..அதெல்லாம்..ஒண்ணுமில்ல..என்றபடி போனில் பேசிக்கொண்டே இருந்தான்.ரமேசுக்கு..ஓருமாதிரியாக இருந்தது.அந்த இடத்தைவிட்டு நகரத்தொடங்கினான்.

அப்போது அந்த வாலிபர்..சார்..சார்..நில்லுங்க..நீங்க எதுக்காக வந்தீங்க..ரெயில் வருமுன்னே போறீங்க..இன்னும் கொஞ்ச நேரத்திலே ரெயில் வந்திடும் என்க..ரமேஷ் பதட்டமானான்..தற்கொலை பண்ணத்தான் வந்தேன்னு அவனிடம் சொல்லமுடியுமா..எனக்கு அறிவுரை சொன்னீங்க..நீங்க மட்டும் எப்படி என்று கேட்பான்..அது நமக்கு தேவையா என்று யோசித்தவன்..இல்லை தம்பி காலையிலே வாக்கிங் போறதுக்காக வந்தேன்..வேற ஒண்ணுமில்லை என்று சமாளித்தான்.

அதற்கு அந்த வாலிபர்..சார்..என் உயிரை காப்பாத்தினீங்க..உங்களை எப்பவும் மறக்கமாட்டேன் என்று ரமேசின் கைகளை குலுக்கிய நேரத்தில் அவர்கள் எதிர்ப்பார்த்த எக்ஸ்பிரஸ் ரெயில்..ஓ..ஓ..என்ற இரைச்சலுடன்: கடந்து சென்றது.

தாமதமாக வந்த எக்ஸ்பிரஸ் ரெயிலை ரமேஷ் வெறித்துப்பார்த்துக்கொண்டிருந்தான்.வாலிபர் சுந்தர்..சார்..எக்ஸ்பிரஸ் ரெயில் போயிட்டு..நான் வர்ரேன்னு கையசைத்துவிட்டு வேகமாக சென்றான்.

ரமேஷ்..ம்..என்றவாறு கையை அசைத்து திரும்பி பார்த்தான்.அவன் மனைவி நின்றுகொண்டிருந்தாள்..ரமேசுக்கு ஒன்றும் ஓடவில்லை.அவன் மனைவி சாரதா..ஏங்க உங்களை எங்கேல்லாம் தேடுறது..என்று எகிற..ரமேஷ்..அது..காற்றுவாங்கிறதுக்காக..இந்த பக்கம் வந்தேன்..அப்படியே ஒரு நண்பருக்கிட்டே பேசிக்கிட்டிருந்தேன்..நேரமாகிப் போச்சு என்று கதைவிட்டான்.

அவள் அதை காதில்வாங்காமல்..என் பிரண்டு சொன்னா..நீங்க இங்கே நிக்கியன்னு..அதான் ஓடிவந்தேன் என்று அவள் சொல்ல ரமேசுக்கு ஒண்ணும் புரியலை.இவா டார்ச்சர் தாங்காமத்தானே செத்து ஒழியலாமுன்னு தண்டவாளத்தை நோக்கி வந்தோம்..ஒருநிமிஸம் நம்மளை காணாம தேடிவந்திருக்காளே…..நிரந்தரமா போயிருந்தா..என்று எண்ணியவனுக்கு தலைசுற்றியது.

ஏங்க..காற்றுவாங்கினபோதும் வாங்க..வீட்டுக்கு என்று அவள் அழைக்க..சரி என்று ரமேஷ் நடக்க..செருப்பில்லாத காலில் முள் குத்த அவன் அம்மா என்று கத்தினான்.அவள் மனைவி துடி துடித்துப்போனாள். என்னங்க.முள் குத்திட்டா..உம் உட்காருங்க..என்று  அவனை உட்காரவைத்து மடிமேல் காலை தூக்கிவைத்து ஊக்கால் முறிந்த முள்ளை எடுத்தாள்..

ஏங்க வரும்போது செருப்பு போட்டுட்டுவரலையா…என்க ரமேஷ் தலையை ஆட்டியபடி ஒற்றைக்காலை நொண்ட..வாங்க ஆட்டோவில் போயிடுவோம் என்று கூறியபடி ரமேசை ஆட்டோவில் ஏற்றி வீட்டிற்கு அழைத்துவந்தாள்..

ரமேஷ் மலங்க மலங்க விழித்தான்.அவன் மனைவி..ஏங்க..உங்கக்கிட்ட சண்டை போடாம..வேற யாருக்கிட்டே சண்டை போடுவேன்..அதுக்காக கோவிச்சிக்கிட்டு போயிடுறதா..அதுக்கு செருப்பு என்ன பண்ணிச்சு..அதை தூக்கிப்போட்டுட்டு போயிருக்கீய..அதை எடுத்து தைக்க கொடுத்திருக்கேன்..ம்..குளிச்சிட்டு வந்து சாப்பிடுங்க..

உங்களுக்குபிடித்த..உப்புமா..இல்லை..இல்லை..முட்டை தோசை ரெடி பண்ணிடுறேன் என்றபடி சமையல் அறைக்குள் சென்றாள்.

ச்சே..ஒருநிமிடம் பொறுமை இல்லாமல் வாழ்க்கையையே இழக்க இருந்தேனே என்றபடி பாத்ரூமுக்குள் சென்று மனம் குளிர குளித்தான் ரமேஷ்.

வே.தபசுக்குமார்.முள்ளன்விளை.தூத்துக்குடி.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *