அ.தி.மு.க.வில் இருந்து விலகி தி.மு.க.வில் சேர்ந்த ஆர்.எம்.டி.ரவீந்திரன், இலக்கிய அணி துணை செயலாளர் ஆனார்
அ.தி.மு.க.வில் பல்வேறு பதவிகளை வகித்தவர் ஆர்.எம்.டி.ரவீந்திரன். இவர் 1996 சட்டமன்ற தேர்தலில் ஆர்.கே.நகர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளராக களம் இறங்கி வெற்றி வாய்ப்பை இழந்தவர்.
இருப்பினும் தொய்வில்லாமல் கட்சி பணியாற்றி வந்த ஆர்.எம்.டி.ரவீந்திரன், கடந்த 17.11.2021 அன்று அக்கட்சியில் இருந்து விலகி தி.மு.க. தலைவர் முதல் அமைச்சர் மு.க,.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் சேர்ந்தார். அமைச்சர் சேகர்பாபு ஏற்பாட்டில் இந்த சந்திப்பு நடந்தது.
இந்த சந்திப்பை தொடர்ந்து உடனடியாக தான் வகித்து வந்த வடசென்னை ராயபுரம் தொகுதியில் உள்ள இளங்கோ கூட்டுறவு சங்க தலைவர் (அ.தி.மு.க. ஆட்சியில் தேர்வு ஆனது ) பதவியில் இருந்து விலகினார் .
தி.மு.க.வில் சேர்ந்தபிறகு தீவிரமாக கட்சி பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் தற்போது ஆர்.எம்.டி.ரவீந்திரனுக்கு தி.மு.க.வில் புதிதாக பதவி தரப்பட்டுள்ளது.
தி.மு.க. இலக்கிய அணியின் மாநில துணை செயலாளராக ஆர்.எம்.டி.ரவீந்திரன் நியமிக்கப்பட்டு இருக்கிறார். இதற்கான அறிவிப்பை தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக ஆர்.எம்.டி.ரவீந்திரன் கூறுகையில், “எனக்கு வழங்கப்பட்டு இருக்கும் புதிய பொறுப்பின் முக்கியத்துவம் உணர்ந்து பணியாற்றுவேன். கட்சியின் வளர்ச்சிக்கு முழுமையாக என்னை அர்ப்பணித்து கொண்டுள்ளேன்” என்றார்.