தமிழகம் வந்தபோது பிரதமர் பாதுகாப்பில் எந்த குளறுபடியும் இல்லை; அண்ணாமலை புகாருக்கு டி.ஜி.பி. சைலேந்திரபாபு பதில்

 தமிழகம் வந்தபோது பிரதமர் பாதுகாப்பில் எந்த குளறுபடியும் இல்லை; அண்ணாமலை புகாருக்கு டி.ஜி.பி. சைலேந்திரபாபு பதில்

பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்துக்கு கடந்த ஜூலை மாதம் சுற்றுப்பயணம் வந்தார். அப்போது, அவரது பாதுகாப்பில் குளறுபடிகள் நடந்ததாக தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பரபரப்பு பேட்டி கொடுத்தார்.
மேலும் இதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தமிழக கவர்னரை சந்தித்தும் மனு கொடுத்துள்ளதாக அவர் தனது பேட்டியில் குறிப்பிட்டார்.
டி.ஜி.பி. சைலேந்திரபாபு நேற்று அளித்த பேட்டி ஒன்றில், அண்ணாமலையின் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:-
பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வந்தபோது, அவரது பாதுகாப்பில் குளறுபடிகள் ஏதுமில்லை. பாதுகாப்பு சிறப்பான முறையில் செய்யப்பட்டு இருந்தது. எஸ்.பி.ஜி. பாதுகாப்பு குழுவினரும் அதுபற்றி குறை சொல்லவில்லை. பாதுகாப்பு சிறப்பாக இருந்ததாகவே அவர்கள் வாய்மொழியாக கூறிவிட்டு சென்றனர்.
மேலும் தமிழக காவல்துறையில் உள்ள பாதுகாப்பு உபகரணங்கள் நவீனமானவை. அவ்வப்போது பழைய உபகரணங்கள் மாற்றப்பட்டு, அப்போதுள்ள நவீன வசதிகளுடன் பாதுகாப்பு உபகரணங்கள் வாங்கப்படுகிறது. பழைய பாதுகாப்பு உபகரணங்கள் வழக்கம்போல மாற்றப்படுகின்றன.
மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழக காவல்துறையில் பாதுகாப்பு உபகரணங்கள் 2 மடங்கு அதிகமாகவே உள்ளது. நவீனமானதாகவும் உள்ளன. அதனால் தான் கேரளா மற்றும் அந்தமானில் இருந்து நமது பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்த வாங்கி செல்கிறார்கள். தற்போது கூட அந்தமானுக்கு மோப்பநாயுடன் நமது பாதுகாப்பு குழுவினர் புதிய உபகரணங்களுடன் சென்றுள்ளனர்.
இவ்வாறு டி.ஜி.பி. சைலேந்திரபாபு கூறினார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *