• May 9, 2024

தூத்துக்குடி புத்தக திருவிழா நிறைவு; ரூ. 1.20 கோடிக்கு புத்தகங்கள் விற்பனை

 தூத்துக்குடி புத்தக திருவிழா நிறைவு; ரூ. 1.20 கோடிக்கு புத்தகங்கள் விற்பனை

தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக 3-வது புத்தக திருவிழா தூத்துக்குடி ஏ.வி.எம். கமலவேல் மஹாலில் நடைபெற்றது, கடந்த 22.-ந்தேதி தொடங்கி நேற்று 29-ந்தேதி யுடன் முடிந்தது,.
இந்த புத்தக திருவிழாவில், தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தின் சார்பாக 45 புத்தக அரங்குகளும், தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு துறைகளின் சார்பாக அரசு திட்டங்களை பொதுமக்கள் அறிந்துகொள்ளும்வகையில் 7 அரங்குகளும், உள்ளூர் பதிப்பகத்தார் சார்பாக புத்தக அரங்குகளும் மற்றும் 9 உணவு அரங்குகளும் அமைக்கப்பட்டிருந்தன.
இப்புத்தக கண்காட்சியில் ரூ.1.20 கோடி மதிப்பில் புத்தகங்கள் விற்கப்பட்டுள்ளது. மேலும் இப்புத்தக கண்காட்சியை பார்வையிடுவதை ஊக்குவிக்கவும், புத்தக வாசிப்பை பொதுமக்களிடம் கொண்டு சேர்க்கவும் புத்தகம் வாங்கும் முதல் 3 அதிர்ஷ்ட வெற்றியாளர்களுக்கு முறையே ரூ.1,00,000/-, ரூ.50,000/- மற்றும் ரூ.25,000/- ரொக்கப் பரிசு வழங்கப்படும் என்ற அதிர்ஷ்ட போட்டி நடத்தப்பட்டது.
இப்போட்டியில், புத்தகம் வாங்கும் அதற்கான ரசீதை , பரிசு கூப்பனுடன் இணைத்து அதிர்ஷ்ட குலுக்கல் பெட்டியில் போடவேண்டும். இப்புத்தகக் கண்காட்சியின் இறுதி நாளன்று குலுக்கல் முறையில் அதிர்ஷ்டசாலிகளாக 3 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பழையகாயலை சேர்ந்த முகமது ஜியாவுதீன் என்பவருக்கு) முதல் பரிசு ரூ.1 லட்சம், கோவில்பட்டியை சேர்ந்த மு.வேல்சாமி என்பவருக்கு 2வது பரிசு ரூ.50,000/-, தூத்துக்குடியை சேர்ந்த .ப.ராஜலட்சுமி என்பவருக்கு 3வது பரிசு ரூ.25,000/- வழங்கப்பட்டது.

இதுதவிர, புத்தகக் கண்காட்சி நடைபெற்ற அனைத்து நாட்களும் பள்ளி மாணவர்களுக்கு, பள்ளிகளுக்கு இடையிலான கலை நிகழ்ச்சிகளும் போட்டிகளும் நடத்தப்பட்டது. இப்போட்டியில், தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள 12 வட்டாரங்களிலிருந்தும் பள்ளிகள் இப்போட்டியில் கலந்துகொண்டன. ஒவ்வொரு நாளும், 2 வட்டாரங்களிலுள்ள பள்ளிகள் இப்போட்டிக்கு அழைக்கப்பட்டன.
இந்தப் போட்டியில் கட்டுரை, ஓவியம் வரைதல், கிளாசிக்கல் நடனம், நாட்டுப்புற நடனம், நாட்டுப்புறப் பாடல், இசைப்போட்டி, பேச்சுப்போட்டி ஆகிய தலைப்புகளில் நடத்தப்பட்டது. ஒவ்வொரு நாளும் மேற்படி பிரிவுகளில் நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற நபர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. மேற்கண்ட போட்டியில், ஒவ்வொரு பிரிவிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் 2 போட்டியாளர்கள் இறுதி நாளில் மெகா இறுதி போட்டியில் கலந்துகொண்டனர். ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்தப் புத்தகக் கண்காட்சியை சுமார் 1 லட்சம் பேர் பார்வையிட்டனர். எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு எழுதிய “தூத்துக்குடி மாவட்ட அறியப்படாத தியாகிகள்” என்ற புத்தகம் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தால் வெளியிடப்பட்டது.

புத்தக் திருவிழா நிறைவு விழா நேற்று மாலை நடைபெற்றது, தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி, விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ,மார்கண்டேயன் ஆகியோர் பேசினார்கள். மேயர் ஜெகன்பெரியசாமி, மாவட்ட ஆட்சியர் உ செந்தில்ராஜ், மாவட்ட ஊராட்சித் தலைவர் பிரம்மசக்தி, மாநகராட்சி ஆணையர் சாரு ஸ்ரீ, மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், சார் ஆட்சியர் கவுரவ்குமார், மாநகராட்சி துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *