கோவில்பட்டி தொட்டிலோவன்பட்டி விலக்கில் போலீஸ் சோதனை சாவடி திறப்பு; 24 மணி நேரமும் செயல்படும்
கோவில்பட்டி நகர எல்லையான தொட்டிலோவன்பட்டி விலக்கில் புதிய போலீஸ் சோதனை சாவடி கட்டிடம் அமைக்கப்பட்டு உள்ளது. கழிவறை வசதியுடன் கூடிய இந்த சோதனை சாவடி 24 மணி நேரமும் செயல்படும். இதன் திறப்பு விழா நேற்று மாலை நடைபெற்றது.
சிறப்பு விருந்தினராக தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜிசரவணன் கலந்து கொண்டு , சோதனை சாவடி கட்டிடத்தை திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேஷ், இன்ஸ்பெக்டர்கள் சுஜித் ஆனந்த், கிங்ஸ்லி தேவானந்த், மங்கையர்க்கரசி, பத்மாவதி மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீசார் கலந்து கொண்டனர்.
பின்னர் போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் , நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-
இந்த சோதனை சாவடி 24 மணி நேரமும் செயல்படும். இதன் மூலம் வெளிமாவட்டங்களில் இருந்து வரும் குற்றவாளிகளை எளிதில் கண்காணித்து நடவடிக்கை எடுக்க முடியும். பொது மக்களுக்கு இடையூறு இல்லாமல் வாகன தணிக்கை செய்ய போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கோவில்பட்டி போலீஸ் கோட்டத்தில் கூடுதலாக போலீசாரை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும். கோவில்பட்டியில் ஆயதப்படை அமைப்பது குறித்து பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும். கோவில்பட்டி போலீஸ் கோட்டத்தில் எல்கை சீரமைப்பது தொடர்பாக வருவாய் துறையுடன் ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கப்படும்.
கோவில்பட்டி நகரில் செயல்படாமல் இருக்கும் கண்காணிப்பு கேமராக்கள் மீண்டும் செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும். தூத்துக்குடி மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்கள் கொடுத்த புகார்களில் 70 சதவீதம் குற்றவாளிகளை கண்டுபிடித்து திருடப்பட்ட பொருட்களை மீட்டுள்ளோம்.
இவ்வாறு பாலாஜி சரவணன் கூறினார்.
முன்னதாக கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அலுவலக வளாகத்தில் மரக்கன்று நாட்டினார். மேலும் சமீபத்தில் நடைபெற்ற யோகா, சிலம்பம், ஸ்கேட்டிங் போட்டிகளில் வெற்றி பெற்ற போலீசாரின் மகன், மகள்களை அவர் பாராட்டினார்.