• May 20, 2024

கோவில்பட்டி நகராட்சி கூட்டம்: உறுப்பினர்களின் கோரிக்கைகளுக்கு தலைவர், ஆணையாளர் அதிரடி பதில்

 கோவில்பட்டி நகராட்சி கூட்டம்: உறுப்பினர்களின் கோரிக்கைகளுக்கு தலைவர், ஆணையாளர் அதிரடி பதில்

கோவில்பட்டி நகராட்சியின் சாதாரண கூட்டம் நேற்று நடந்தது. நகர்மன்ற தலைவர் கா.கருணாநிதி தலைமை தாங்கினார். ஆணையாளர் ஓ.ராஜாராம், துணை தலைவர் ஆர்.எஸ்.ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர கூட்டத்தில் நடந்த விவாதம் விவரம் வருமாறு:-
நகர்மன்ற உறுப்பினர் க.சீனிவாசன்(சி.பி.எம்.):- தமிழக அரசு நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு ரூ.2200 கோடி ஒதுக்கி உள்ளது. ஆனால் கோவில்பட்டி நகராட்சிக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. கோவில்பட்டி நகராட்சியில் திருட்டுத்தனமான குடிநீர் இணைப்புகள் கண்டறியப்பட்டு துண்டிக்கப்பட்டு வருகிறது. நகர் முழுவதும் இந்த சோதனை மேற்கொண்டு முறையின்றி எடுக்கப்பட்ட குடிநீர் இணைப்புகளை துண்டிக்க வேண்டும். மந்தித்தோப்பு சாலையை விரிவாக்க செய்ய வேண்டும்,
உறுப்பினர் த.ஏஞ்சலா (தி.மு.க.):- 35-வது வார்டில் தண்ணீர் பிரச்சினை தலைவிரித்தாடுகிறது. விநியோகிக்கப்படும் குடிநீரும் மிகவும் கலங்கலாக பயன்படுத்த முடியாத நிலையில் வருகிறது. இதுகுறித்து பலமுறை தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. இதனை நகர்மன்ற தலைவர் நேரில் வந்து ஆய்வு செய்ய வேண்டும்.

துணை தலைவர் ஆர்.எஸ்.ரமேஷ்(ம.திமு.க):- 11-வது வார்டுக்கு உட்பட்ட காளியப்பர் காம்பவுண்ட் தெருவில் வாறுகாலை சீரமைக்க வேண்டும். 2-வது குடிநீர் திட்டத்தில் இணைப்பு வழங்கி, சாலையை சீரமைக்க வேண்டும். பத்திரகாளியம்மன் கோயில் முன்புள்ள சிமெண்ட் சாலையை பெயர்த்து எடுத்துவிட்டு, புதிதாக சாலை அமைக்க வேண்டும்.
உறுப்பினர் கனகராஜ்(தி.மு.க . ):- 36-வது வார்டில் உள்ள சிறிய பாலம் பழுதடைந்துள்ளது. கடந்த 4 மாதங்களாக இது பற்றி கூறி வருகிறேன். மேலும், காலனி வீடுகள் இடிக்கப்பட்டு, இடிபாடுகள் அகற்றப்படாததால் அங்கு மழைநீர் தேங்கி கொசு உற்பத்தியாகும் கேந்திரமாக உள்ளது. எனவே, பாலத்தை சீரமைத்து, கட்டிட இடிபாடுகளை அகற்ற வேண்டும்.

உறுப்பினர் தவமணி(தி..மு.க..):-14-வது வார்டில் 3200 வாக்காளர்கள் இருப்பதாக பட்டியலில் உள்ளது. ஆனால், மொத்தமே 1800 வாக்காளர்கள் தான் உள்ளனர். இறந்தவர்கள் இன்னும் வாக்களித்துக் கொண்டு தான் உள்ளனர்.
உறுப்பினர் சண்முகராஜ்(தி.மு.க. ),:- பாரதி மேட்டு தெரு 1, 2 ஆகியவற்றுக்கு 2-வது குடிநீர் திட்டத்திலும், சாஸ்திரி நகருக்கு பழைய குடிநீர் திட்டத்தில் குடிநீர் விநியோகிக்கப்படுகின்றன. எனவே, அனைத்து தெருக்களுக்கும் புதிய குடிநீர் திட்டத்தில் குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும்
.உறுப்பினர் ஜோதிபாசு(சி.பி.எம். ):- நகராட்சி சமுதாய அமைப்பாளர் சரிவர பணிக்கு வரவில்லை. அவர்கள் மூலமாகத்தான் தமிழக அரசு மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு சுழற்சி நிதி வழங்கப்படுகிறது, இவர் சரியாக பணிக்கு வராததால், மகளிர் குழுக்களுக்கு பல கோடி ரூபாய் கடன் வழங்க முடியாத நிலை உள்ளது.
உறுப்பினர்களின் கோரிக்கைகளுக்கு நகர்மன்ற தலைவர் கருணாநிதி , ஆணையர் ராஜாராம் ஆகியோர் பதிலளித்து பேசும்போது கூறியதாவது:-
கோவில்பட்டி நகராட்சிக்கு அரசிடமிருந்து நிதி கேட்டு பெறப்படும். ஏற்கனவே நகராட்சியில் 500 முறையற்ற குடிநீர் இணைப்புகள் உள்ளது என்பது கண்டறிப்பட்டுள்ளது. இதற்கென தனியாக ஸ்கேன் இயந்திரம் வாங்க உள்ளோம். இதனை கொண்டு முறையற்ற வகையில் எடுக்கப்பட்டுள்ள குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்படும்.


பிரதான சாலையோரம் உள்ள கடைகளுக்கு குடிநீர் வேண்டுவோருக்கு தனியாக ஒரு குழாய் இணைப்பு மீட்டருடன் வழங்கப்படும். அவர்கள் மீட்டரில் உள்ள அளவுக்கு தொகை செலுத்தினால் போதுமானது. பத்திரகாளியம்மன் கோவில் உள்ள சாலையில் புதிதாக சாலை அமைக்கும் போது, கோவில் முன்புள்ள சிமெண்ட் சாலையும் பெயர்த்து எடுக்கப்பட்டு, சாலையில் சம அளவில் தண்ணீர் தேங்கா வண்ணம் அமைக்கப்படும்.
கலங்கலாக விநியோகிக்கப்படும் குடிநீர் குறித்து ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும்.

நகராட்சியில் இருந்து உங்கள் வார்டுகளில் இறந்தவர்களின் பட்டியல் பெற்று, அதனை வருவாய்த்துறையிடம் ஒப்படைத்து, இறந்தவர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்படும்.. இதுதொடர்பாக தேர்தல் பிரிவுக்கு இறந்தவர்கள் பட்டியல் அனுப்பி வைக்கப்படும்.

சமுதாய பணியாளர் வருகை குறித்து ஏற்கெனவே மாவட்ட ஆட்சியருக்கு அறிக்கை சமர்பிக்கப்பட்டுள்ளது. தற்போதும் புகார்கள் வரப்பெற்றுள்ளன. மகளிர் சுயஉதவிக்குழு கடன் பெறுவதில் உள்ள சிக்கல் உள்ளிட்டவை குறித்து விசாரித்து மாவட்ட ஆட்சியருக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
தொடர்ந்து, கூட்டத்தில் வைக்கப்பட்ட 15 தீர்மானங்களும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், சுகாதார அலுவலர் நாராயணன், பொறியாளர் ரமேஷ் மற்றும் உறுப்பினர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *